(Source: ECI/ABP News/ABP Majha)
பா.ஜ.க. கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரம்; அமர்பிரசாத் ரெட்டி கைது - போலீஸ் அதிரடி
சென்னையில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி கைதாகி உள்ளார்.
Amar Prasd Reddy: சென்னையில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடி கம்பம்:
சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும்,பொதுமக்களும் கொடி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிய போலீசார் இருபக்கமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
அமர்பிரசாத் ரெட்டி கைது
இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களை வேனில் ஏற்றி அருகிலுள்ள மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டிற்கு சென்று போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், தற்போது அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 3ஆம் தேதி வரை (15 நாட்கள்) காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை கண்டனம்:
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், ”தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியையும், பாஜக நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும் காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க