TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் கடந்த ஒரு வாரம் கன மழை கொட்டிய நிலையில் , அடுத்த ஒரு வாரத்திற்கு மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக மழையானது வெளுத்து வாங்கியது. குறிப்பாக டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டுவிட்டு தமிழகத்திற்குள் நுழைந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றோடு மழை கொட்டியது. அடுத்ததாக டெல்டா மாவட்டம் வழியாக சென்னைக்கு வந்த டிட்வா, 4 நாட்கள் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதனால் சென்னை முழுவதும் தொடர் மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மழை எப்போது ஓய்வெடுக்கும் என காத்திருந்த மக்களுக்கு வருகிற 15ஆம் தேதி வரை சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளது.
ஓரிரு இடங்களில் மழை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06-12-2025) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (07-12-2025) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-12-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
நாளை (07-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08-12-2025 முதல் 10-12-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
06-12-2025: லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





















