TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
TN WEATHER ALERT: வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் ஏமாற்றம் அளித்தது. அதே அக்டோபர் தொடக்கமே அதிரடியாக இருந்தது. பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக டிட்வா புயல் சென்னை அருகையே 4 நாட்கள் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை பெய்வதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைவு
இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 12-12-2025 மற்றும் நாளை 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற 14ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 15ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
12-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
நாளை (13-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
12-12-2025 முதல் 15-12-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.





















