(Source: ECI/ABP News/ABP Majha)
Ford India : நாங்க என்ன செய்வது? நிர்கதியாய் நிற்கும் சென்னை ஃபோர்டு ஊழியர்கள்.. கோரிக்கை இதுதான்!
கடந்த இரண்டு வாரங்களில், சென்னை ஃபோர்டு ஆலையத்தின் உற்பத்தித் திறன் வெறும் 20 சதவிகிதமாக குறைந்துள்ளது.
சென்னையில் ஃபோர்டு ஆலையை மூடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தங்கள் வாழ்வாதாரங்களை பாதுக்காக வேண்டும் என்று நிறுவனத்தின் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் செயல்பட்டு வந்தது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக அறிவித்தது.
நிறுவனத்தின் இந்த முடிவுக்கு சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்க முடிவெடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்," 2015-16 ஆம் ஆண்டில், சென்னை உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தித் திறன் எட்டப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 650 முதல் 700 கார்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டுகளில் உற்பத்தித் திறன் 70 சதவீதமாகக் குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இது 20 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது, நாளொன்றுக்கு 130 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன"என்று அவர் கூறினார்.
இந்தியாவில் அதன் ஆலைகள் மூடப்பட்டால் நேரடியாக 8000 பணியாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பார்கள். இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக தொழில்துறை அதிகாரிகள் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், " ஜூன் 2022 வரை கால அவகாசம் உள்ளது. ஃபோர்டு ஆலைகளை தொடர்ந்து இயக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் யோசிக்கப்பட்டு வருகின்றன. ஃபோர்டு ஆலை வேறு ஏதேனும் ஆட்டோமொபைல் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுவொரு நல்ல சொத்து. விற்பனை பரிவர்த்தனையை எளிதாக்குவோம்," என்று கூறினார். மேலும், 3,300 தொழிலாளர்கள் வேலை செய்யும் மறைமலைநகரில் உள்ள உற்பத்தி ஆலையில் நிலைமையை மாநில அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
சென்னை ஆலையில் எஞ்சின் உற்பத்தி மற்றும் கார் உற்பத்தியை 2022 2வது காலாண்டுக்குள் நிறுத்துகிறது. உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஃபோர்டு பிசினஸ் சென்டர், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையம் தொடர்ந்து செயல்படும். இதில், 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 170 டீலர்களை கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர் என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்தது. ஃபோர்டு கார் வாகன விற்பனையில் சுமார் 2,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை டீலர்கள் செய்துள்ளனர். குறைந்தது 40,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், " இந்த அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வாகன சேவையை வழங்கும் டீலர்களுக்குக் குறித்த நேரத்தில் போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்று ஃபோர்டு இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அனுராக் மெஹ்ரோத்ரா உறுதியளித்துள்ளார்.
இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், இத்தருணத்தில் இது போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுமார் 170 டீலர்கள், 391 விற்பனை நிலையங்களின் மூலம் ரூபாய்.2000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். ஃபோர்டு இந்தியா 4,000 பேரைத் தான் பணியில் அமர்த்தியது. இந்த டீலர்கள் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பைகளை உருவாக்கியிருந்தனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ், தி நியூஸ் மினியூட் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்," ஒப்பந்த விதிமுறைகள் குறித்து தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து வருகிறோம். அதன் பிறகு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொழிலாளர்கள் வாழ்வாதாரங்கள் குறித்து கவலை கொள்கின்றனர். அவர்களின் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செயல்படுவது சங்கத்தின் பணி" என்று தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கு அமல்படுத்தியதன் விளைவாக ஆட்டோமொபைல் சந்தையின் தேவை குறைந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தியும் குறைந்து வருவதால், அசெம்பிளி யூனிட்களில் வேலை கிடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று பணியாளர் முருகன் தெரிவித்தார்.
பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்பந்த ஊழியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துகின்றன. ஹூண்டாய், நிசான் போன்ற பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் நிரந்தர ஊழியர்களைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மராட்டிய மாநிலம் தாலேகோன் நகரில் அமைத்துள்ள அதன் மகிழுந்து ஆலையை மூடுவதற்கான முயற்சிகளை கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே தொடங்கியது. கடந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டு தொகையையும் அறிவித்தது. ஆனால், அதை ஏற்காத தொழிற்சங்கங்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஆலையை மூடுவதற்கான அனுமதியை மராட்டிய அரசு வழங்கவில்லை. தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பிறகும் கூட ஆலையை மூட அனுமதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசும் இது போன்ற நடவடிக்கையை எடுக்குமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.