Suburban Electric Train: சென்னை புறநகர் ரயிலில் கழன்று பின்னால் சென்ற பெட்டிகள்.. பயணிகளுக்கு திக் திக்..! சைதாப்பேட்டையில் நடந்தது என்ன?
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் பெட்டிகள் கழன்று தனியாக சென்றதன் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சைதாப்பேட்டை அருகே திடீரென ரயிலின் பெட்டிகள் கழன்று தனியாக பின்னால் சென்றது. இதன் காரணமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே காலை 5.30 மணி அளவில் வந்து நின்றது. மீண்டும் அந்த ரயில் புறப்படும் போது 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயிலில் முதல் 4 பெட்டிகளின் இணைப்பு கேபிள் அறுந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இணைப்பு கேபிள் அறுந்ததை கண்டறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை சாதுரியமாக ரயிலை நிறுத்தியதால் பின்னால் கழன்ற 4 பெட்டிகளில் பயணித்த பயணிகளுக்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே கழன்ற ரயில் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் காலை முதலே தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் 2வது வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 2 மணி நேரமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயிலுக்காக நீண்ட நேரமாக காத்து கொண்டு இருந்தனர். கோடம்பாக்கம், கிண்டி , பல்லாவரம் , தாம்பரம் , பெருங்களத்தூர் என பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருந்ததால் செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் 4 ஆம் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. நடைமேடை 4 ல் வரகூடிய விரைவு ரயில்களில் அனைத்து பயணிகளையும் செல்ல ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது. கழன்ற ரயில் பேட்டிகளை தனி தனியாக தாம்பரம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும், ரயில் சேவை பாதிப்படைந்த ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணிக்காக தாம்பரத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை அடுத்து தற்போது கிட்டத்தட்ட சுமார் 2 மணி 30 நிமிடத்திற்கு பிறகு கடற்கரை - தாம்பரம் செல்லக்கூடிய ரயில் சேவை இரண்டாவது நடைமேடையில் மீண்டும் வழக்கம் போல் தொடங்கியது.