டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையம், கிண்டி கத்திப்பாரா பகுதிகளில் அதிரடி சோதனை!
"டெல்லியில் கார் வெடி விபத்தை தொடர்ந்து, சென்னையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை"

டெல்லியில் நடந்த வெடி விபத்தின் எதிரொலியாக சென்னை விமான நிலையம் மற்றும் கிண்டி கத்திப்பாரா அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லி வெடி விபத்து
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே, ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் எரிந்து நாசமானதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6.52 மணியளவில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து வெடிபொருள் வெடித்து, பெரிய அளவில் தீயை ஏற்படுத்தி, அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது. தலைநகரில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னையில் தீவிர சோதனை
சென்னையிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பினை தீவிரப் படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை விமான நிலைய நுழைவாயில் பகுதியில் மீனம்பாக்கம் காவல்துறையினர் மற்றும் சென்னை விமான நிலைய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி ஜிஎஸ்டி சாலையில் பயணிக்கும் வாகனங்ளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள உடைமைகள் விமான நிலையத்தில் பயணிக்க வரும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.





















