பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
சாலையோரம் நின்றிருந்த பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதியதில், உதவி சிறப்பு ஆய்வாளர் உயிரிழந்தார். மேலும், 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கிராமத்தில் இன்று காலை தலைமையிட வன திட்ட அலுவலர் அசோக் குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சிவகங்கையில் இருந்து தாயமங்கலம் நோக்கி வந்த நகரப் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த உதவி சிறப்பு ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் மீதும் மோதியது. இதில் காவலர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் உதவி சிறப்பு ஆய்வாளர் கர்ணன் உயிரிழந்தார்.
மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை காவலர் தேடி வருகின்றனர்.





















