'தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்' - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
”உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டிய காவல்துறை மாவட்ட தலைமை அதிகாரியே, ஒருதலைபட்சமாக வெளிப்படையாக பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது”
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளியில் படித்து வந்தார். இப்பள்ளியில் நடந்த கட்டாய மதமாற்ற முயற்சிகள் மற்றும் பிற கொடுமைகளால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. 17 வயது பெண்ணை இழந்த பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போதே மனம் சுக்குநூறாக உடைந்து விடுகிறது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி தனது தற்கொலைக்கு காரணம் மதமாற்ற முயற்சிகள் என்பதையும், தனக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தூய இருதய பள்ளியில் பணிபுரியும் சிலரது பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு என்பது மாணவியின் மரண வாக்குமூலம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
ஆனால் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவி தற்கொலைக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள், பொதுமக்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் இறங்கிய பிறகு அப்பள்ளியின் வார்டனை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நியாயமான, நேர்மையான விசாரணையை முன்னெடுக்க வேண்டிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், "மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று விசாரணை தொடங்குவதற்கு முன்பே பேட்டி அளித்துள்ளார்.
உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டிய காவல்துறை மாவட்ட தலைமை அதிகாரியே, ஒருதலைபட்சமாக வெளிப்படையாக பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இவரது தலைமையில் விசாரணை நடைபெற்றால் அது நியாயமாக, நேர்மையாக நடைபெறுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கை வேறு ஒரு அதிகாரியின் தலைமையில் நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
மாணவி தற்கொலை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட போதும், வேறு சில காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட போதும் அதனை தமிழகம் முழுதும் பரபரப்பாகி கண்டன அறிக்கைகள் கொடுத்தவர்கள், இப்போது வாய்மூடி மவுனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை. மாணவி தற்கொலை விவகாரத்தை கையிலெடுத்து மத அரசியல் செய்வதாக பாஜக மீது சில தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, தனது மரணத்திற்கு மதமாற்ற முயற்சிகள் தான் காரணம் என்பதை மாணவி பதிவு செய்துள்ளார். அதனால்தான், விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக போராடி வருகிறது.
பொதுவாக தமிழகத்தில் இந்துக்களுக்கு என்று ஒரு பிரச்சினை வரும்போது அதனை எந்த கட்சியும் கண்டுகொள்வதில்லை. மௌனமாக கடந்து விடுவார்கள். அதுபோல தான் இந்த மாணவியின் மரணத்திலும் கடந்து போக நினைக்கிறார்கள். ஆனால், பாஜக இந்த பிரச்சினையை கையிலெடுத்து போராட ஆரம்பித்ததும், பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்பதை உணர்ந்ததும், மத அரசியல் செய்வதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். மாணவிவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று அறிக்கை விடக்கூட இவர்களுக்கு மனமில்லை.
அரசியல் கட்சியாக திமுகவின் நிலைப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மௌனம் சாதிப்பது சரியல்ல. இதற்கு முன்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபோது தமிழக அரசும், காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுத்ததோ, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு என்ன இழப்பீடு கொடுத்தார்களோ அதனை மாணவியின் குடும்பத்திற்கும் அளிக்க வேண்டும். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் கட்டாயமாக நடைபெறும் மதமாற்ற முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். விசாரணை தொடங்குவதற்கு முன்பே ஒருதலைபட்சமாக கருத்து தெரிவித்த தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழக முதலமைச்சரோ, அவரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையோ இந்த வழக்கை நேர்மையாக கையாள மாட்டார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.