தமிழ்நாட்டில் தனித்து களம் இறங்குகிறதா பாஜக? மேலிடத்திற்கு அறிக்கை அளித்த நிர்மலா சீதாராமன்!
கூட்டணி முறிவால் ஏற்படும் விளைவுகள் குறித்து தலைமையின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பாஜக தேசிய தலைவர்களிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. இதைப்போன்று வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே, அதிமுக தலைவர்கள் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு:
சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர்ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இச்சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவு, பாஜக தேசிய தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுகவை சமாதானப்படுத்த பாஜக தேசிய தலைமை முயற்சித்ததாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கை:
இதற்கிடையே, கூட்டணி முறிவால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனிடம் தேசிய தலைமை கேட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமையின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பாஜக தேசிய தலைவர்களிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடனும் தலைவர்களிடமும் கருத்துகளை கேட்டு, அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதன்படி, பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க முடியும் என நிர்மலா சீதாராமன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையில் மற்றொரு அணி?
இதன் காரணமாக, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி உருவாகலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில், சசிகலா, டி.டி.வி. தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாமக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் உள்ளிட்டோர் இணையலாம் என அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கபடுகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், வலுவான கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஏற்கனவே, 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் எதிர்ப்பு மனநிலை நிலவி வருவதாகவும் தற்போது அதிமுக கூட்டணியில் விலகி இருப்பது அதற்கு மேலும் நெருக்கடியை தரும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.