(Source: ECI/ABP News/ABP Majha)
Michael Battis Award: ராமநாதபுரத்தை சேர்ந்த வனவிலங்கு காப்பாளர் ஜகதீஷ் பக்கனுக்கு யுனெஸ்கோ விருது.. முதலமைச்சர் வாழ்த்து..!
வனவிலங்கு காப்பாளரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பக்கன் , உயிர்க்கோளக காப்பக மேலாண்மைக்கான யுனெஸ்கோவின் மைக்கேல் பாட்டிஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதன்முறையாக, ராமநாதபுரம் வனவிலங்கு காப்பாளரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பக்கன் சுதாகர், உயிர்க்கோளக காப்பக மேலாண்மைக்கான யுனெஸ்கோவின் மைக்கேல் பாட்டிஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 14 ஆம் தேதி பாரிஸில் நடைபெறும் விழாவில் ஜகதீஷ் பக்கன் விருதைப் பெற்று, அவரது ஆய்வு குறித்து விரிவுரை ஆற்றுவார்.
மைக்கேல் பாட்டிஸ் விருது:
உலகெங்கிலும் உள்ள உயிர்க்கோளக காப்பகங்களை நிர்வகிப்பதில் சிறந்த சாதனை படைத்ததற்காக டாக்டர் மைக்கேல் பாடிஸ்ஸின் நினைவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 12,000 டாலரும் ரொக்க பரிசாக வழங்கப்படுவது வழக்கம். யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோளகத்தின் (Man and the Biosphere (MAB) Programme) திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு கவுன்சிலின் முடிவைப் பின்பற்றி இந்த விருது 2004 இல் நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, MAB இந்த ஆண்டு தகுதியான 16 வேட்பாளர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
மார்ச் 2023 இல், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜகதீஷ் பக்கனின் "நிலையான வாழ்வாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சமூக அடிப்படையிலான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் அவரது ஆய்வை 2023 விருதுக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில் தற்போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் ஷரோன் ரைட், நூசா உயிர்க்கோளக காப்பகத்தில் பணிபுரிந்ததற்காக விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து:
இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான திரு. @jagdishbakanIFS அவர்கள் @UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும்… https://t.co/UyEw3PMcJN
— M.K.Stalin (@mkstalin) June 6, 2023
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பக்கன் ஜகதீஷை வாழ்த்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பக்கன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.