மதுக்கடை கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால் தாக்குவதா? காவல் அதிகாரி மீது நடவடிக்கை- அன்புமணி வலியுறுத்தல்
மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டால் தாக்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டால் தாக்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’செங்கல்பட்டு நகரம், வேதாச்சலம் நகரில் உள்ள மதுக் கடையில் மதுப் புட்டிகளுக்கு அதிகபட்ச விலையை விட ரூ.10 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய ஒருவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித் தனமாக தாக்கும் காணொலி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக ஒருவரை காவல்துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இது மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் செயல் ஆகும்.
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும்; மதுவுக்கு அடிமையான அனைவரும் அப்பழக்கத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதே நேரத்தில் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதையும், அதை எதிர்த்து வினா எழுப்புபவர்கள் காவல் துறையினரால் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மதுக் கடைகளை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, மது குடிக்க வரும் குடிமகன்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை, இப்போது கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதற்கு காரணமான காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய செயல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி மதுக் கடைகளை மூடுவது தான். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அடுத்த இரு ஆண்டுகளில் மூடி முழுமையான மது விலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஒவ்வொரு அரசும் அறிவிக்கிறது. ஆனால் அவை அறிவிப்பாக மட்டுமே இருக்கின்றன.
முன்னதாக மதுவிலக்குப் பற்றிப் பேசிய பாமக தலைவர் அன்புமணி, தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; அதனால்தான் தமிழ்நாட்டில் மது வணிகமும் அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து மது வணிகம் செய்வது மக்கள் நல அரசின் பணி அல்ல; மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். இதை தமிழ்நாடு அரசு உணர்ந்து அதன் மதுவிலக்குக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
மதுக்கடைகளை கலைஞரின் நூற்றாண்டில் படிப்படியாக மூடி, 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.