Metro Rail Phase 2: சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மெரினா கலங்கரை விளக்கத்தில் தொடங்கிய சுரங்கம் தோண்டும் பணி..
சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மெரினா கலங்கரை விளக்கத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் இயந்திரமான பிளமிங்கோ கொண்டு இன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது.
இந்தியாவில் முதன்முறையாக கடற்கரைக்கு அருகாமையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் இதுவாகும். சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்–சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி, மாதவரம்–சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில்மொத்தம் 42.6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப் பாதை, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதவரம் பால்பண்ணை ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில், கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி 4-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்ட 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில், பிளமிங்கோ என பெயர் வைக்கப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் தனது பணியை இன்று கலங்கரை விளக்கத்தில் தொடங்கியது. இந்த நவீன சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் மெரினாவில் பொருத்தப்பட்டு தற்போது சோதனைகளும் நிறைவு பெற்று சுரங்கம் தோண்டும் பணிகளை தொடங்கியுள்ளது. பூமியிலிருந்து 29 மீட்டர் ஆழத்தில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் கூறுகையில், “ அடுத்த நான்கு நாட்களில் இது முழுமையான பணியை தொடங்கும். இந்த நிலையம் 416 மீட்டர் நீளத்திலும் 35 மீட்டர் அகலத்திலும் அமைய உள்ளது. 12 ரயில்களை இங்கு நிறுத்த முடியும். சுரங்க அமைக்கும் போது மேலே உள்ள மண் வெளியே வரும் என்பதால் இந்த பணி மிகவும் சவாலாக இருக்கும்.
திருமயிலையில் நான்கு அடுக்குக் கொண்ட ரயில் நிலையம் அமைய உள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில் 42 கிலோ மீட்டருக்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 23 சுரங்கம் தோன்றும் இயந்திரங்களில் 8 பயன்பாட்டில் உள்ளது மீதம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
Aditya L1 Countdown : நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1.. தொடங்கியது கவுண்ட்-டவுன்..