விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அர்ஜுன் சம்பத் வைத்த அதிரடி கோரிக்கைகள்
விநாயகர் சதுர்த்தியை இந்து ஒற்றுமை விழாவாக கொண்டாட வேண்டும் - அர்ஜுன் சம்பத்

திருப்பத்தூர்: விநாயகர் சதுர்த்தியை இந்து ஒற்றுமை விழாவாக கொண்டாட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகம் முழுவதும் இந்து ஒற்றுமை விழாவாக சிறப்பாகக் கொண்டாட வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த சம்பவம் கொலையா, தற்கொலையா அல்லது பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புடையதா என்பது குறித்து உண்மை வெளிவர வேண்டும். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பில் இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும்.
தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது வரவேற்கத்தக்கது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும். நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறுஉள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண வேண்டும்.
முன்பு மத்திய அரசை எதிர்த்து ‘கோ பேக்’ போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.
சட்டப்பேரவையில் தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும்.
கோயில்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட அரசியல் நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். கோயில்கள் அரசியல் சார்பற்ற ஆன்மிகத் தலங்களாக இருக்க வேண்டும்.
மேலும், பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்கள் வழங்கும் திட்டம் தேவையற்றது.
ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் வாகன வசதியுடன் உள்ள நிலையில், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத வகையில் புதிய கார் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு அர்ஜுன் அவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















