ரூ.1000 கோடி... 3 மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தேர்தலுக்கு புழங்கிய தொகை! கொட்டியது எடுக்கவா? கொடுக்கவா!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு நிகராக, 1,000 கோடி ரூபாய் வரை வேட்பாளர்கள் வாரியிறைத்துள்ளனர்.
தமிழகத்தில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிஉள்ளன.சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பல்வேறு சர்ச்சைகள், மோதல்கள், முறைகேடுகளுடன் தேர்தல் முடிந்துள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 155 பேரும், 154 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 1,005 பேரும், 359 ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 2,010 பேரும், 2,679 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 9,735 பேரும் களத்தில் நின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 11 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 64 பேரும், 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 384 பேரும், 269 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 922 பேரும், 1,793 பதவிகளுக்கு 5,666 பேர் என, மாவட்ட அளவில் மொத்தமாக, 2,171 பதவிகளுக்கு, 7,036 பேர் போட்டியிட்டனர். இந்த இரண்டு மாவட்டங்களிலும், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் முதல் தலைவர், வார்டு உறுப்பினர் வரை, தி.மு.க., கூட்டணி கட்சிகளே, 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன.
ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாததால், எப்போது தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்து தேர்தலில் நின்று பதவியை பிடிப்பதற்காகவே, சில ஆண்டுகளாக தங்கள் பகுதியில் செலவழித்து, 'கெத்து' காட்டிக் கொண்டிருந்தவர்களும், இந்த தேர்தலில், பணத்தை வாரி இறைத்தனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு, நகர் புறத்தை ஒட்டிய ஊராட்சிகளில், 10 லட்சம் ரூபாய் வரையும், கிராம பகுதிகளில் 1 - 2 லட்சம் ரூபாய் வரையிலும் செலவழித்து உள்ளனர்.அதே போல, தலைவர் பதவிக்கு, சென்னை புறநகர் ஊராட்சிகளில், 2 கோடி ரூபாய் வரை செலவழித்தவர்களும் உண்டு. நகர்புறத்தை ஒட்டிய ஊராட்சிகளில், 50 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரையும், கிராம பகுதிகளில், 10 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரையும் செலவழித்துள்ளனர். பெண்களுக்கு கொலுசு, மூக்குத்தி, ஹாட் பாக்ஸ், இரும்பு கட்டில், குக்கர், புடவை, அரிசி மூட்டை, எண்ணெய் பாக்கெட், காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் தொகுப்பு, கூப்பன் என, அவரவர் தகுதிக்கு ஏற்ற பரிசு பொருட்களை வாரி வழங்கினர். ஓட்டுக்கு, 1,000 முதல் 5,000 ரூபாய் வரை கொடுத்தனர்.அப்படி வாரி வழங்கியும் தோற்ற வேட்பாளர்கள், ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, அதிர்ந்து போய் அடுத்த நகர்வு தெரியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
ஊரக தேர்தலில் வெற்றி பெறும் வார்டு உறுப்பினர்கள் முதல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் வரை, யாருக்கும் அரசு சார்பில் சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. மாதாந்திர கூட்டம் நடக்கும் தினத்தில், கூட்டத்திற்கு வந்து கையெழுத்திட்டால், அமர்வு படி மட்டும் கிடைக்கும். அதுவும் வார்டு உறுப்பினர்களுக்கு 50 ரூபாய்; ஊராட்சி தலைவருக்கு 100 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்களுக்கு 500 ரூபாய் அரசு பணத்தில் வழங்கப்படும். ஊராட்சி தலைவருக்கு, மாதம் 1,000 ரூபாய், பயண படி என்ற வகையில் வழங்கப்படும். இந்த தொகையை உயர்த்தி சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த படியை பெற்று, 'மக்கள் சேவை' செய்யவே, வேட்பாளர்கள் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி தேர்தல் அறிவிப்பு முதல் ஓட்டுப்பதிவு வரை, 2.49 லட்சம் ரூபாயும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 7.20 லட்சம் ரூபாயும் கண்காணிப்பு அதிகாரிகளால்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, அரிசி சிப்பம், மதுபாட்டில், மூக்குத்தி உள்ளிட்ட பரிசு பொருட்களும் சிக்கி உள்ளன. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய எடுத்துச்செல்லப்பட்ட பணம், பரிசு பொருட்களில், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது மிக மிக சொற்பம் என்பதே நிதர்சனமான உண்மை என்கின்றனர் வாக்காளர்கள். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 20ம் தேதி, அந்தந்த தேர்தல்அலுவலர்களால் பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது. வரும் 22ல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இந்த மறைமுக தேர்தலில், மாவட்ட மற்றும் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஓட்டளிப்பதற்கு, பல தரப்பு உறுப்பினர்களிடம் அரசியல் கட்சியினர் பேரம் துவக்கி உள்ளனர்.