Annamalai : ”திமுக அமைச்சர்கள் செய்த ஊழலை வெளியிடுவேன்..” புயலைக் கிளப்பும் அண்ணாமலை..
திமுகவின் இரண்டு அமைச்சர்கள் செய்த ஊழலின் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
திமுக அமைச்சர்கள் இரண்டு பேரின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்ற பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு அமைச்சர்கள் ஊழல்:
மாநிலத்தில் ஆளும்கட்சியை எதிர்கட்சிகள் எதிர்த்து அரசியல் செய்வது வழக்கம். அப்படிப் பார்த்தால் சட்டப்பேரவையில் திமுகவிற்கு அடுத்து அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பது அதிமுக தான். அதிகாரப்பூர்வ சட்டமன்ற எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், உண்மையில் எதிர்கட்சிப் போன்று பாஜகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தினந்தோறும் செய்தியாளர்களை சந்திக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது திமுகவின் இரண்டு அமைச்சர்கள் செய்த ஊழலின் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
கலக்கத்தில் அமைச்சர்கள்:
ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறி வந்தநிலையில், இருவருக்கும் இடையே ட்விட்டரில் காரசார விவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்தவாரம் மற்றொரு அமைச்சர் செய்த ஊழல்களை வெளியிடப்போவதாகக் கூறியிருக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் ரேடாரில் சிக்கியிருக்கும் அமைச்சர் யார் என்பது குறித்து கலக்கத்தில் இருக்கின்றனராம் திமுக அமைச்சர்கள். ஏனெனில், ஐபிஎஸ்-ஸாக இருந்த அண்ணாமலைக்கு அரசு அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை எப்படி பெறுவது என்பது குறித்த அனுபவம் இருக்கும் என்பதால் பெரும்பாலும் அந்த புகார்களில் முகாந்திரம் இருக்கும் என்றே நம்பப்படுகிறது. அதனால் அண்ணாமலை வாசிக்கப்போகும் ஊழல் புகாரில் எந்த துறை இடம்பெறப்போகிறது என்பது குறித்து கலக்கத்தில் இருக்கின்றனர் அமைச்சர்கள் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், ஊழல் புகார் உண்மையாகி அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டால் அந்த இடத்திற்கு தாங்கள் வரவும் காய் நகர்த்திக்கொண்டிருக்கின்றனர் திமுகவினர். அது மட்டுமல்லாமல், திமுகவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தவும் பாஜக தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நடத்திய போராட்டம் வெற்றியடைந்ததையடுத்து, அதே போல ‘திருவாரூர் மாடல்’ என்ற தொடர்ந்து போராட்டங்களை நடத்த பாஜக ஆயத்தமாகி வருகிறது.
பிரம்மாண்டப் பேரணி:
பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்துவது, ஜிஎஸ்டி தொடர்பாக முதலமைச்சரின் பேச்சு உள்ளிட்ட பல காரணங்களுக்காக நாளை கோட்டையை நோக்கி பேரணி நடத்துகிறது பாஜக. இதற்காக சென்னையின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாஜகவினரை தீவிரமாக திரட்டி வருகிறது பாஜக தலைமை. இந்த பேரணியின் மூலம் தமிழ்நாட்டில் தங்களுக்கு இருக்கும் பலம் மற்றும் செல்வாக்கைக் காண்பிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.