Annamalai Pressmeet: பெரியாரை எந்த இடத்திலும் நாங்கள் அவமானப்படுத்தவில்லை: அண்ணாமலை
பெரியார் சிலை வழிபாடு தலங்களுக்கு முன் இல்லாமல், பொது இடங்களில் வைக்க வேண்டும் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை வழிபாடு தலங்களுக்கு முன் இல்லாமல், பொது இடங்களில் வைக்க வேண்டும் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “ 'என் மண் என் மக்கள் ' யாத்திரை 103 தொகுதியை கடந்துள்ளது, 15 ம் தேதி முதல் மீண்டும் யாத்திரை தொடங்கும். யாத்திரை மூலம் பெரிய அனுபவம் கிடைத்துள்ளது , கட்சி சாராத பலர் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர். ஜனவரி இறுதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டுள்ளேன். யாத்திரை மூலம் சாமானிய மனிதர்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. திராவிட மாடல் அரசின் சமூக அநீதியை பார்க்க முடிகிறது.
நாங்குநேரி சம்பவம் , வேங்கைவயல் போன்ற இடங்களில் மக்கள் கேள்வி கேட்கின்றனர் , 300 நாட்கள் ஆன பிறகும் வேங்கைவயல் சம்பவத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பெரம்பலூரில் கல்குவாரி ஒப்பந்தத்தில் பங்கேற்ற பட்டியலினத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை ஆட்சியர் முன்பு நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
தமிழ்நாடு நன்றாக இல்லை என்பது யாத்திரை மூலம் தெரியவந்தது , ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையானதை செய்யவில்லை . 5 ஆண்டில் தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனை பூதாகரமான பிரச்சனையாக மாறும். விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. திராவிட மாடல் அரசில் லஞ்சம் அதிகமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை இந்த மூன்றுமே தீர்மானிக்கும்.
பெரியர் சமூக அநீதியை எதிர்த்து போராடியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழக மக்கள் பார்வை மாறியுள்ளது. கோயில் முன்பாக , கடவுளை வணங்குபவர்களை அவமதித்து எழுதப்பட்ட வாசகங்களை மக்கள் விரும்பவில்லை. எனவேதான் அவற்றை நாங்கள் அகற்றுவோம் என்று கூறினோம். கோயில்களுக்கு முன்பாக இல்லாமல் பொது இடங்களில் பெரியார் சிலை இருக்கலாம்.
பெரியார் கம்யூனிஸ்ட் க்கு எதிராக கூறியதை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக வைத்தால் சரியாக இருக்குமா...? திமுக குறித்து பெரியார் கூறியதை திமுக அலுவலகம் முன்பு வைத்தால் அக்கட்சியினர் ஏற்றுக் கொள்வார்களா..? பெரியாருக்கான மரியாதையை நாங்கள் எப்போதும் கொடுக்கிறோம் , ஆனால் கோயில் முன்பாக குறிப்பிட்ட வாசகங்கள் அகற்றப்பட வேண்டும் , பெரியாரை தரம் குறைத்து நாங்கள் பேசவில்லை .
மசூதி , தேவாலயம் முன்பு அந்த வழிபாட்டு தலங்களுக்கு எதிராக வாசகங்களை வைத்தால் அவர்கள் ஏற்பார்களா..? ஆனால் கோயில்களுக்கு மட்டும் ஒரு நியாயமா..? இது குறித்து பிற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
இந்துத்துவா கட்சிகளிடமிருந்து 162 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீட்கப்பட்டதில் மொத்த 3 சதவீதம் இந்துத்துவா கட்சிகளிடமிருந்து மீட்கப்பட்டது. எஞ்சிய 97 சதவீதத்தை ஆக்கிரமித்தது யார். திமுக , அதிமுக , காங்கிரஸ் என அனைத்து கட்சி பெயரையும் சொல்ல வேண்டும்.
அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் மட்டுமே கட்டாயத்தின் பெயரில் ஆக்கிரமிப்புகளை மீட்கின்றனர். எங்கள் கொள்கைப்படி அறநிலையத்துறையை எதிர்க்கிறோம்.
கொக்கு மீன் என எங்களை சொல்லும் சில அரசியல் தலைவர்கள் , அவர்களுக்கு கொக்கு போல பொறுமை இருந்திருந்தால் அந்தந்த கட்சிகள் இப்போது எங்கு நிற்கிறார்களோ அங்கு நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜக எனும் கொக்குவுக்கு உண்டு , அது 2026 ல் தெரியும். எங்களுக்கான நேரம் 2026 தான்.
அமர்பிரசாத் ரெட்டி போல பல தொண்டர்கள் சிறையில் உள்ளனர். 409 வழக்கு திமுக ஆட்சிக்கு வந்த பின் பாஜகவினர் மீது பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு முன்பாக கைது செய்கின்றனர் , கைதான பாஜகவினரில் 80 சதவீத புகார் திமுக , 10 சதவீதம் புகார் காவல்துறை மூலம் கொடுக்கப்பட்டது. கைது செய்தவர்களை பேருந்தில் கூட்டி சென்று அதை பேசுபொருளாக்குகின்றனர். அவர்கள் வெளியில் வரும்போது தலைவர்களாகத்தான் வெளிவருவர்.
சிறையில் அதிக நபர்கள் இருக்கும் அறைகளில் அடைக்கின்றனர். பேச வேண்டிய நேரத்தில் ஆக்ரோசமாக பேசுவோம். எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக வருமான வரித்துறை இன்னும் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் யார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். செய்திக்குறிப்பு வந்த பிறகு அதுகுறித்து கூறுகிறேன்.
அமலாக்கத்துறை சோதனைக்கு பாஜக காரணம் என கூறும் மல்லிகாஜூன கார்கே போன்றவர்கள் புரிந்து பேச வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அஜித் பவார் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும் , அவர் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் தண்டனை அனுபவிக்க மாட்டார் என கூற முடியாது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரிடம் இருந்து ஜோதிமணி பணம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது , ஜோதிமணி வழக்கு தொடர்ந்தால் என்னிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பிக்க தயார்.
பெண்களை அவமதிக்கும் வகையில் நிதிஷ் குமார் பேசியதற்கு கனிமொழி ஏன் கருத்து கூறவில்லை என ஆச்சரியமாக உள்ளது. 'இந்திய' கூட்டணி உருவான பிறகு திமுகவின் ஆபாச பேச்சு அதில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் பரவிவிட்டது , போட்டிபோட்டு பேசுகின்றனர். சுய நலத்திற்காக அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
சனாதனத்தை ஒழிப்பதாக திமுக கூறியதால் பெரியார் சிலை தொடர்பாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை கூறுகிறோம். அதிமுக ஆட்சியில் அதற்கான அவசியம் எழவில்லை. முத்துராமலிங்க தேவர் , வைத்தியநாத ஐயர் சிலைகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.