Anna University Issue: முரண்பட்ட கருத்து! அண்ணா பல்கலை. விவகாரத்தில் நடந்தது என்ன? கோவி செழியன் விளக்கம்
Anna University Harassment Case: அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது: கோவி. செழியன்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆணையர், அமைச்சர் செழியன் ஆகியோர் முரண்பட்ட கருத்துச் சொன்னதாக சர்ச்சை எழுந்த நிலையில், புகார் பெறப்பட்டது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் துறை அவசர உதவி எண் 100-க்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அதன் அமடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல் துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் POSH - Prevention of Sexual Harrasment ) கமிட்டி உள் விசாரணை குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார்.
காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரிய வந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது’’ என்று கோவி செழியன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், திமுக அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன், சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். எனினும் அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த குற்றத்தை தடுத்திருக்கலாம் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மாணவி விவரங்களுடன் வெளியான முதல் தகவல் அறிக்கை
இதில் அடுத்த திருப்பமாக, சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வெளியானது. இதற்கு அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அரசு தன் கட்சிக்காரர் என்பதால் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கை வெளியானதைக் கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.