Petrol Diesel Price Hike : பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறிய வாக்குறுதியை குறைக்காமல் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறறம்சாட்டியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிக அதிக அளவில் கலால் வரியை விதித்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மாநில அரசுக்கு குறைந்த தொகையையே வழங்குவதாகவும், இத்தகைய சூழலில் தமிழகத்தில் எரிபொருள் விலைகளை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகி விடும் என்று கூறியிருக்கிறார். இது தவறு.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த மார்ச் 13&ஆம் தேதி வெளியிட்ட போதும் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் இதே அளவில் தான் இருந்தன. அவற்றைக் கணக்கிட்டு தான் தி.மு.க. தேர்தல் அறிக்கைக் குழுவும், அதன் தலைவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியை அளித்திருப்பார்கள். அப்போது சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன்? சாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை தி.மு.க. வழங்கியதா?
மத்திய அரசு வரிகளை உயர்த்தி விட்டது என்று கூறும் நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பது மூடி மறைத்து விட்டார். சென்னையின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில் மாநில அரசின் வரி 34%, அதாவது சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால் ரூ.26.30. ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. மத்திய அரசின் வரிகள் உயர்த்தப்பட்டாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்தாலும் தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் கூட மறுக்க முடியாது.
உதாரணமாக கடந்த மே 7&ஆம் தேதி திமுக அரசு பொறுபேற்ற போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15. அதிலிருந்து தமிழக அரசுக்கு கிடைத்த வரி ரூ. 23.60. அதன்பின் கடந்த ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.99 உயர்ந்துள்ளது. அதன்மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் மதிப்பு கூட்டு வரியின் பங்கும் லிட்டருக்கு ரூ.1.30 அதிகரித்திருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.10 குறைத்தால் கூட அரசுக்கு இழப்பு ஏற்படாது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.30 கூடுதல் வரி வசூலிக்கும் தமிழ்நாடு மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளைக் குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை. எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலைகளை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய தி.மு.க., இப்போது அதை எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பாதாகக் கூறிய தி.மு.க. இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான் இரட்டை வேடம்; இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

