MK Stalin: பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்.. ஆனால் இது தனிநபர் எதிர்ப்பல்ல - டெல்லியில் முக ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாட்கள் டெல்லிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் டெல்லி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அத்துடன் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்து மாநில கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும். இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றுபட்டு இருப்பதே நம்முடைய பலமாக கருத வேண்டும்.
இந்தியாவின் நலன், கூட்டாட்சித்துவம், மதபேதமின்மை மற்றும் சமுத்துவம் ஆகியவற்றை காக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தேசிய அரசியலில் திமுகவின் பங்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. பிரதமரை தேர்ந்தெடுப்பதிலிருந்து, குடியரசுத் தலைவர் வரை திமுகவின் பங்கு எப்போதும் இருந்துள்ளது.
புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். pic.twitter.com/s4eM1szoP5
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 31, 2022
என்னைப் பொறுத்தவரை மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியல் ஆகிய இரண்டும் வேறு அல்ல. தேசிய அரசியல் என்பது மாநில அரசியலை சார்ந்ததாகவே இருக்கும். ஆகவே இந்த இரண்டையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. பாஜகவை எதிர்ப்பத்து என்பது அவர்களுடைய கொள்கையை எதிர்ப்பது தான். கட்சிக்கோ, எந்தவிதமான தனிநபருக்கும் எதிரான எதிர்ப்பல்ல.
தமிழ்நாட்டில் மதசார்ப்பற்ற கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கிறது. நாங்கள் தேர்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களிலும் அந்தக் கூட்டணியாகவே இணைந்து செயல்படுகிறோம். அதுவே எங்களுடைய வெற்றிக்கு முக்கியமான பங்காக அமைந்திருக்கிறது. ஆகவே அதேபோன்று தேசியளவில் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். இதை நான் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பரப்புரைக்கு வந்த போது கூறியிருந்தேன். தற்போதும் அதை நான் மீண்டும் கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி இந்த முன்னெடுப்பை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்