நியாயம் எங்கள் பக்கம் உள்ளது; எங்களது அடுத்த நடவடிக்கை இதுதான்.. - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபன் டாக்!
நியாயம், நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. பொதுக்குழு செல்லுமா? செல்லாதா என்பது யார் அதை கூட்டினார்கள் என்பதை பொருத்தது என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த தீர்ப்பை இபிஎஸ் தரப்பினர் வெகுவாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் “நியாயம், நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. பொதுக்குழு செல்லுமா? செல்லாதா என்பது யார் அதை கூட்டினார்கள் என்பதை பொருத்தது. உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றமும் தங்களது பொறுப்பை தட்டிக்கழித்தது போல் தோன்றுகிறது. அப்படியில்லையென்றால் அவர்களுக்கு புரியும் படி எடுத்துச்சொல்ல எங்களுக்கு தெரியவில்லை. தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். பொதுக்குழுவை கூட்டவே ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்து போட வேண்டும். அப்புறம் எப்படி அவர்கள் கூட்டிய பொதுக்குழு செல்லும்?" என்றார்.
தொடர்ந்து, ”அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். தீர்மானங்களை பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒரு வரி கூட இல்லை. எங்களை நீக்கியது செல்லும் என்றோ, இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்சை தேர்வு செய்தது செல்லும் என்றோ ஒரு வரி கூட இல்லை” என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
அடுத்ததாக பேசிய வைத்திலிங்கம் “உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளதாக கருதுகிறோம். தீர்ப்பு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். தீர்மானங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அனுமதித்துள்ளனர். ” என்றார்.