Jayakumar Criticise OPS: ”ஓபிஎஸ் மர கழண்டுபோன நட்டு” : காட்டமாக பேசிய ஜெயக்குமார்..
"வார்த்தைக்கு வார்த்தைதான். என்னையும் சரி, சண்முகத்தையும் சரி, இபிஎஸையும் சரி ஒருமையில் விமர்சனம் செய்வது. எப்படி சரியாக இருக்க முடியும். இது, விரக்தியின் உச்சம். விரக்தியின் விளிம்பு"
திருச்சி மாநாட்டில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
திருச்சி மாநாட்டில் பொங்கிய ஓபிஎஸ்:
"பன்னீர்செல்வம் தனியா நின்று டீ ஆத்திக் கொண்டு இருக்கிறார் என்று ஜெயக்குமார் சொன்னார். இப்போது பார்த்தாயா எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று" என ஓபிஎஸ் பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார், இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது, பேசிய அவர், "அரசியலில் நாகரிகம் வேண்டும். பண்பாடு வேண்டும். யாராவது வந்து எங்கள் மீது கல்லை வீசினால்தான் நாங்கள் எதிர்த்து கல் வீசுவோம். இல்லை என்றால், எதிர்வினையாற்றுவது கிடையாது. அந்த வகையில், ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், நானும் சரி என் கட்சியும் சரி, யார் விமர்சனை வைக்கிறார்களோ அவர்கள் மீது விமர்சனம் வைப்போம்.
பதிலடி அளித்த ஜெயக்குமார்:
ஆனால், அந்த விமர்சனத்திற்கு தகுந்தபடிதான் விமர்சிப்போம். அதை தாண்டி போக மாட்டோம். எங்கள் வீட்டு பிள்ளை படம் பார்த்திருக்கிறீர்களா? எம்ஜிஆர் உட்கார்ந்திருந்தபோது நம்பியார் வந்து ஒரு அடி அடிப்பார். அதற்கு, எம்ஜிஆர் இரண்டி அடி கொடுப்பார். அதுபோல்தான் நாங்கள். விமர்சனங்கள் அளவோடு இருக்க வேண்டும்.
ஒரு முதலமைச்சராக இருந்தவர், தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஓபிஎஸ். நாகரிகம் அறிந்து பேச வேண்டும் அல்லவா? நாகரிகம் இல்லாமல் பேசுவது. அதுவும் அது மாநாடு இல்லை. பொதுக்கூட்டம். கூலிக்கு ஆள்பிடித்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, ஆட்களை உட்கார வைத்து அவர்களுக்கு பிரியாணி கொடுக்காமல் சப்பாத்தியை ரோல் செய்து கொடுத்து கஷ்டப்பட்டு உட்கார வைத்தார்கள்.
இவரு பேசும்போதே, பாதி பேர் எழுந்து சென்றுவிட்டார்கள். நாற்காலி எல்லாம் காலியாக இருந்தது பார்த்திருப்பீர்கள். ஆனால், நாகரிகம் கருதியிருக்க வேண்டும். என்னை, சி.வி. சண்முகத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியை தரக்குறைவாக. அவன், இவன் என்று சொன்னார். என்றைக்காவது நான் அவன், இவன் என சொல்லி இருக்கிறேனா?
”ஓபிஎஸ் மர கழண்டு போன நட்டு”
மொழி பிரச்னையில் என்ன செய்தீர்கள் என பொன்முடி கேள்வி எழுப்பினார். சொல்லிவிட்டு செல்லலாம் ஆட்சியில் என்ன செய்தோம் என்று. ஆனால், அவன், இவன் என பதில் அளித்துள்ளார்.
இவர் எல்லாம் பஜாரில் இருக்க வேண்டியது. பேருந்துக்கு டிக்கெட் ஏற்றுவார்கள் தெரியுமா அந்த வேலையில் இருக்க வேண்டியது. ஆனால், இவர் அமைச்சராக இருக்கிறார். நான் என்ன செய்வது. என்னை அவன் என சொன்னால், நான் சொல்லுவேன்.
வார்த்தைக்கு வார்த்தைதான். என்னையும் சரி, சண்முகத்தையும் சரி, இபிஎஸையும் சரி ஒருமையில் விமர்சனம் செய்வது. எப்படி சரியாக இருக்க முடியும். இது, விரக்தியின் உச்சம். விரக்தியின் விளிம்பு. ஓபிஎஸ் மர கழண்டு போன நட்டு" என்றார்.