AIADMK: ஒரு உறுப்பினருக்கு ரூ.10 கட்டணம்: அதிமுக பொதுச்செயலாளராக முதல் அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தனது முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தனது முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அதிமுக தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன் என்றும், அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தனது முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறை உள்ளது. அதன்படி கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.
கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இதில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகவும், மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியது.
இந்த சூழலில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக அமைந்தது. அதேசமயம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.
பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். னைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.