DMK Meeting: 16 ஆண்டுகளுக்கு பின்...கொங்கு டார்கெட்...டிசம்பர் 17-இல் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநாடு!
திமுக இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெற இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி இளைஞர் அணியின் இரண்டாவது மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இளைஞர் அணியின் முதல் மாநாடு நடந்த நிலையில், இரண்டாவது மாநாடு சேலத்தில் நடைபெறுவதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக இளைஞரணி மாநாடு:
1980ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மதுரையில் உருவான இளைஞர் அணி, இன்று இளைஞர்களை அரசியல் மையப்படுத்தி வளர்தெடுத்திடும் களமாக உள்ளது. இதன் பிறகு, கடந்த 2007ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தலைமையேற்று, தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். அதன் பிறகு மாநாடு நடைபெறவில்லை. அவருடைய வழியில், தற்போது உள்ள இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது மாநில மாநாட்டை நடந்த உள்ளார். திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அந்த அமைப்பை வலுப்படுத்த அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட, திமுக இளைஞர் அணியில் புதியதாக நிர்வாகிகளை நியமித்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞர் அணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநாட்டினை தொடர்ந்து, வருகிற டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் பேர் பங்கேற்பா?
இந்த மாநாட்டில் சுமார் 10 லட்ச பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி கூறுகையில், "முதலமைச்சரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், 10 லட்சம் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடத்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இந்த மாநாடு 16 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாணடாக நடைபெற உள்ளது. கொங்கில் திமுகவின் முகமாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வருகை திமுகவிற்கு வலுசேர்க்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல்:
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் செய்து வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் சில மாநில கட்சிகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய மாநாட்டை நடத்தவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதில், திமுக இளைஞரணி தலைகள் சிலர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாக அவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது.