ADMK: "எடப்பாடியை இழக்க நாங்கள் விரும்பவில்லை" ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி
எடப்பாடி பழனிசாமி உள்பட யாரையும் இழக்க விரும்பவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு கட்ட மோதலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் அப்போது முதல் உறுதுணையாக இருந்து வருபவர் வைத்திலிங்கம்.
எடப்பாடியை இழக்க விரும்பவில்லை:
இவர் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "100 சதவீதத்தில் 99.99 சதவீதத்தினர் அ.தி.மு.க. இணைய வேண்டும், புரட்சித் தலைவி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக அம்மா ஆத்மா, புரட்சித் தலைவர் ஆத்மா நிறைவேற்றும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. 2026ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும்.
நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. எடப்பாடியையும், மற்றவர்களையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாகவே விலகிவிடுவார்கள். ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.
ஏமாற்றிவிட்டார் எடப்பாடி:
நாடாளுமன்ற தேர்தல், கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டுதான் எடப்பாடி இந்த இயக்கத்தை அழித்துவிடுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். உண்மையும் அதுதான். 2021ல் நாங்கள் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று நானும், நத்தம் விஸ்வநாதனும் வலியுறுத்தினோம்.
ஆனால், நாம் தனித்து நின்றே 150 இடங்களில் வந்துவிடுவோம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றினார் எடப்பாடி பழனிசாமி. மக்களவைத் தேர்தலிலும் மெகா கூட்டணி வரும், 40 சதவீதம் பெற்றுவிடலாம் என்று கூறி, இன்று 20 சதவீதம் வரும் அளவிற்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். அதை நினைத்து தினகரன் அப்படி சொல்லியிருப்பார்.
சசிகலா சுற்றுப்பயணம் ஒருங்கிணைப்பதற்காகவே செல்கிறார். அவர்களையும், தினகரனையும், ஓ.பி.எஸ்.சையும், எடப்பாடியையும் இணைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் எண்ணம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல கட்ட சிக்கல்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் முறையே ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தினர். ஆனால், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட மோதல் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதுடன் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
தொண்டர்கள் விருப்பம்:
ஆனாலும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைச் சந்தித்தது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மீண்டும் அதிகரிக்க சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கியுள்ள சூழலிலும் அ.தி.மு.க.விற்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சியை ஒருங்கிணைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.