ADMK - BJP: அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு..!
கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார். அவர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன், ஏ.கே செல்வராஜ் ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளனர்.
AIADMK MLAs Th. T. K. Amulkandasami, Th. Varadharaj Jayaraman and Th. A.K Selvaraj call on Tmt. @nsitharaman before the commencement of the Credit Outreach Programme in Coimbatore, Tamil Nadu.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) October 3, 2023
Also present on the occasion are Tmt. @VanathiBJP, National President -… pic.twitter.com/xEyqkoSKQm
மக்களவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது முதல் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முக்கிய திருப்பமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக மற்றும் பாஜக இடையே இருந்த கூட்டணி முறிந்தது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறைந்த அதிமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்தும் சர்ச்சையாக பேசியது அதிமுகவினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாகவே இரு கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இடையில் பாஜக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா மற்றும் மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுக உடன் கூட்டணி முறிவு குறித்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பாஜக நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை பங்கேற்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலே நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிப்பதற்காகதான் பேச்சுவார்த்தை நடக்கிறது என வி.பி துரைசாமி கூறினார்.
நேற்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அண்ணாமலை பேசியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை அளித்ததாக கூறப்படும் நிலையில் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இன்று கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமனை சந்தித்து பேசியுள்ளனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தகவல் தெரிவிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாக பேசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்திப்பின் போது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உடன் இருந்தார்.