TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு எப்போது? என்று நடிகரும். அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய். கோலிவுட்டின் உச்சநட்சத்திரமாக உலா வரும் இவருக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
த.வெ.க. முதல் அரசியல் மாநாடு:
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய அவர் தங்களது தேர்தல் அரசியல் 2026 சட்டமன்ற தேர்தல் முதல் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியைத் தொடங்கிய பிறகு கோட் படப்பிடிப்பில் நடிகர் விஜய் தீவிரமாக இருந்து வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.
த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு நடத்த பல மாவட்டங்களில் இடம் பார்த்து வந்த நிலையில், கடைசியாக விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கும் உடன்படுவதாகவும் அறிவித்தனர்.
தேதி குறிக்கிறார் விஜய்:
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுவது மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநாடு எப்போது? என்ற அறிவிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. செப்டம்பர் மாதம் 23ம் தேதி மாநாடு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு எப்போது? என்று நடிகரும், த.வெ.க. தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். ஏற்கனவே வெளியான தகவலின்படி, செப்டம்பர் 23ம் தேதி தவெக மாநாடு நடைபெறுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்பதும் இன்று தெரிய வரும்.
இதனால், த.வெ.க. தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அங்கீகாரத்தை வழங்கியது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு தனது கட்சிப்பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
அரசியலில் முழு கவனம்:
அரசியலில் களமிறங்கியதால் திரைத்துறையில் இருந்து ஒதுங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நடிகர் விஜய், எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படமே கடைசி என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர் அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.