''வட்டி கட்டிவிட்டோம்.. வட்டிக்கு வட்டிதான் சிக்கல்'' - நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்!
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்குக்கோரிய மனு தள்ளுபடியானதை அடுத்து விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என சூர்யா தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
வருமான வரி மீதான வட்டியைச் செலுத்தத் தடை கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அது குறித்து சூர்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது
அதில், வருமான வரிக்கு வட்டியை ஏற்கெனவே செலுத்தி விட்டோம். தற்போது வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளோம். வருமான வரியும், வரிக்கான வட்டியும் செலுத்தி முறையாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்குக்கோரிய மனு தள்ளுபடியானதை அடுத்து விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.11 கோடியை செலுத்த வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருமான வரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டது என்கிற அடிப்படையில் வரியின் மீதான வட்டியைக் கட்டுவதற்கு மட்டும் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூர்யா. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
வருமான வரி மதிப்பீடு செய்வதற்கு நடிகர் சூர்யாவின் தரப்பு ஒத்துழைக்காததால்தான் கணக்கிடுவதில் தாமதமானது என்று வருமானவரித்துறை தரப்பு நீதிமன்றத்தில் விளக்கியது. இதன் அடிப்படையில் சூர்யாவுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக்கோரும் உரிமையில்லை என்றும் வாதம் செய்தது. இதன் அடிப்படையில் நடிகர் சூர்யாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி.