Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரி தனக்கு ஏ வகுப்பு சிறை கேட்கவும், முன்ஜாமின் பெறவும் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி. இவர் பட வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியல் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதன்மூலம் தொடர்ந்து புகழ் வெளிச்சத்திலே இருந்து வந்தார்.
சிறையில் கஸ்தூரி:
இந்த நிலையில், கடந்த 3ம் சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு பெரும் அதிர்ச்சியை பலரது மத்தியிலும் ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது பல இடங்களிலும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த கஸ்தூரியின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஹைதரபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை போலீசார் பிடித்தனர். பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கஸ்தூரிக்கு நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
ஏ வகுப்பு சிறையா?
இதையடுத்து, கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது மதிய வேளை என்பதால் சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நடிகை கஸ்தூரி பிரியாணி சாப்பிட மறுத்துள்ளார். இரவில் சக கைதிகளுக்கு வழங்கப்பட்ட கலவை சாதமே கஸ்தூரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர் குறைந்த அளவே சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, சக கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரி சிறையில் தனக்கு ஏ வகுப்பு சிறை வசதி கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சிறைச்சாலைகளில் பெரும்பாலும் ஏ வகுப்பு சிறையானது நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனை கைதிகளுக்கே வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நடிகை கஸ்தூரியோ நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பவர் ஆவார்.
பொதுவாக தண்டனை கைதிகளில் பட்டதாரி, தொடர்ந்து வரி செலுத்துபவர்களுக்கு ஏ வகுப்பு சிறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஏ வகுப்பு சிறையில் தனி சிறையில் கட்டில், தலையணை, கூடுதல் லைட், படிப்பதற்கு நாளிதழ்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படும். மற்ற கைதிகளிடம் இருந்து ப்ரைவசி எனப்படும் தனியுரிமை கிடைக்கும்.
நடிகை கஸ்தூரி தனக்கு ஏ வகுப்பு சிறை பெறுவதற்கும், ஜாமின் பெறுவதற்கம் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கஸ்தூரியே அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் உள்ள கைதிகளை 3 வகைகளாக பிரிக்கின்றனர். முதல் பிரிவினர் சிவில் பிரிசனர் எனப்படும் நீதிமன்ற காவலில் உள்ள கைதிகள். இரண்டாவது பிரிவினர் விசாரணைக்காக ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள். 3வதாக தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை காலத்தை அனுபவிக்கும் சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.