"மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்" வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!
அரசியலில் குதித்துள்ள விஜய்-க்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்
அரசியலில் நுழைந்த விஜய்:
அதில், தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து தமிழ்நாடு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளார்.
தனது அரசியல் கட்சியின் பெயர் வெளியானதில் இருந்தே, ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் விஜய். அரசியலில் குதித்துள்ள விஜய்-க்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
"மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்"
— TVK Vijay (@tvkvijayoffl) February 4, 2024
வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கம் அளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விஜய்-க்கு வாழ்த்து கூறியிருந்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது. புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டுகள். நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்" என்றார்.
"”தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இவரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "கட்சியை தொடங்கி உள்ள விஜய் மண்ணை ஆள்வதற்கு முன்பு முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கியபோது ஒரு வெற்றிடம் இருந்தது. அதனால், அவர் வெல்ல முடிந்தது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தக்க வைக்க கடினமாக உழைக்க வேண்டும்" என்றார்.