kallakurichi violence: 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.. 91 % பள்ளிகள் இயங்கியது.. - முழுவிவரம்..!
தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகள் இயங்க வில்லை எனத் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ஒரு தற்கொலை என பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப்போராட்டம் நேற்று கலவரமாக வெடித்தது. பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த 500 க்கும் மேற்பட்ட போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் இன்று முதல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்காது என்றும் பள்ளிக்கு நஷ்டஈடு தருவதோடு, தனியார் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை
இந்த நிலையில் பள்ளி இயக்குநரகம் சார்பில், மூடப்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் இன்று தனியார் பள்ளிகள் திறக்கப்படுமா படாதா என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் அது குறித்தான விவரத்தை மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இன்று இயங்கிய, இயங்காத பள்ளிகளின் விவரம்
அதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. 38 மாவட்டங்களில் உள்ள 987 தனியார் பள்ளிகள் இயங்க வில்லை. இந்த விவரத்தின் படி கிட்டத்தட்ட 91 சதவீத பள்ளிகள் வழக்கம் போல இயங்கி உள்ளன.
குறிப்பாக காஞ்சிபுரம், நாமக்கல், சிவகங்கை ,விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கி உள்ளன. தர்மபுரியில் உள்ள 190 பள்ளிகளில் 31 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளன.
நாமக்கல்லில் 216 பள்ளிகளில் 70 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளன. கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 167 பள்ளிகளில் 153 பள்ளிகள் இயங்கி உள்ளன. சென்னையில் 689 பள்ளிகளில் 684 பள்ளிகள் இயங்கி உள்ளன. இந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது