Cyclone Mocha: 2023-ம் ஆண்டின் முதல் புயல் – “மோக்கா” உருவாக வாய்ப்பு அடுத்த வாரத்தில் மழை, காற்று என கலக்கப்போகிறதா?
இந்த ஆண்டின், அதாவது 2023-ம் ஆண்டின் முதல் புயல் என்ற வகையில், இந்த புயல், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தமாக, வரும் 7-ம் தேதி முதலில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் மாறிவிட்டது, சுற்றுச்சூழலும் வானிலையும் தலைகீழாக மாறுகிறது என்றால் யாரும் நம்பமாட்டீர்கள்… ஆனால், இப்ப பாருங்க, கோடை காலத்தில் வங்கக் கடலில் புயல் ஒன்று உருவாகப்போவதாக வானிலையாளர்கள் கணித்துள்ளார்கள். கோடை காலத்தில் இதற்குமுன்னரும் புயல் வந்திருக்கிறது… ஆனால், எப்போதாவதுதான் வரும்.. இப்பப் பாருங்க… அடிக்கடி வருகிறது. மழைக்காலம், கோடைக்காலம் என்றெல்லாம் இல்லை. அனைத்து காலங்களிலும், வங்கக் கடலில் அடிக்கடி புயல் உருவாகிறது என்பதே, சூழலியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்றால் மிகையில்லை.
2023-ம் ஆண்டின் முதல் புயல்:
இந்த ஆண்டின், அதாவது 2023-ம் ஆண்டின் முதல் புயல் என்ற வகையில், இந்த புயல், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தமாக, வரும் 7-ம் தேதி முதலில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவகையில், வளி மண்டல சுழற்சி சூழல் இருப்பதாக வானிலையாளர்கள் கணித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த குறைந்த காற்றழுத்தம், சிறிது சிறிதாக வலுவடைந்து, நிலை, பகுதி, மண்டலம், தீவிர மண்டலம் அதாவது புயலாக மாறி, கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். தற்போதைய நிலையில், அடுத்த வாரம் 10-ம் தேதி அல்லது 11-ம் தேதி வாக்கில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் குறைந்த காற்றழுத்தமே உருவாக வில்லை என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தற்போது காணப்படும் வானிலை காரணிகளை வைத்து, வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்தம், புயலாக வலுவடைய வாய்ப்புகள் இருக்கின்றன என வானிலையாளர்கள் கணித்துள்ளனர். எப்போதும்போல், வானிலை என்பது சட்டென மாறக்கூடியது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
புயலுக்கு “மோக்கா” எனப் பெயர் வைக்கப்படும்:
ஒருவேளை புயல் உருவானால், இந்த ஆண்டின் முதல் புயலாக இருக்கும். இதற்கு வடக்கு இந்தியப் பெருங்கடல் நாடுகள் வானிலை கூட்டமைப்பின் சார்பில், இந்த முறை ஏமன் நாட்டின் சார்பில் புயலுக்கு மோக்கா ( MOCHA) – (மோக்கா - MOKHA என உச்சரிக்க வேண்டுமாம்) என அழைக்கப்படும் என அறியப்படுகிறது. இதற்கு முன்னால், யாஸ், ஆம்பன், அய்லா போன்ற புயல்கள் மே மாதத்தில் வீசி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு "மோக்கா"-வால் பாதிப்புண்டா?
இந்தப் புயலால் சென்னை உட்பட தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு இருக்குமா என்பதுதான், புயல் உருவானால், நம்மில் பலரின் கேள்வியாக இருக்கும். இதற்கும் வானிலையாளர்கள், தங்களது கணிப்பினைப் பதிலாகத் தந்துள்ளனர். அதன்படி, இந்த “மோக்கா” புயல் உருவானாலும், அதனால், தற்போதைய வரைகலை கணிப்பின்படி, தமிழகம், ஆந்திராவிற்குப் பெரிய பாதிப்பு இருக்காது. வட ஒடிஸ்ஸா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கும். சில சமயத்தில் வங்கதேசத்தை கடுமையாக தாக்கவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது எனவும் தனியார் வானிலையாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், இந்திய அரசின் சார்பில் சென்னையில் செயல்பட்டு வரும் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் இது தொடர்பாக வெளியாகவில்லை. பொதுவாக, தகவல் உறுதிசெய்யப்பட்ட பிறகு, எச்சரிக்கையும் வானிலை தகவல்களும் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்பதால், புயல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மேலும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
இந்தப் புயல் குறித்த தகவல்கள் ஒரு பக்கம் பரவி வந்தாலும், மறுபக்கத்தில் வளி மண்டல அடுக்க சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை வரை அந்தந்த வானிலை சுழற்சிக்கு அந்தந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.