Finance Commission: விருந்து கொடுக்கும் தமிழக அரசு, நிதி வழங்குமா மத்திய அரசு? இன்று சென்னை வரும் 16வது நிதிக்குழு..!
Finance Commission: மத்திய அரசின் 16வது நிதிக்குழு 4 நாள் சுற்றுப்பயணமாக, இன்று தமிழ்நாடு வருகை தருகிறது.
Finance Commission: மத்திய அரசின் 16வது நிதிக்குழுவிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் இன்று விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் வருகை தரும் நிதிக்குழு:
மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், நிதிக்குழுவின் பரிந்துரைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்நிலையில், அடுத்து 5 ஆண்டு திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் தரவுகளை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று நிதிக்குழு சேகரித்து வருகிறது. அதில் மாநிலங்களின் பொருளாதார நிலைமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு, 4 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனது.
முதலமைச்சர் ஸ்டாலின் விருந்து:
தகவல்களின்படி, 12 உறுப்பினர்கள் அடங்கிய நிதிக்குழு சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் சென்னை வந்தடைவர். தொடர்ந்து நங்கநல்லூர் செல்லும் அவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதை முடித்துக் கொண்ட பிறகு இரவு 7.30 மணிக்கு தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பும் நிதிக் குழுவினர், அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்க உள்ளனர். இறுதியாக அங்கு ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்திலும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, நாளை முதல் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பயணம்:
வரும் 20ம் தேதி வரை தமிழகத்தின் கீழடி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க உள்ள நிதிக்குழுவினர், பயணிக்க உள்ளனர். அப்போது அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். எதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மாநிலத்திற்கு தேவை என்பது போன்ற விவரங்களை கேட்டறியவுள்ளனர்.
அதன்படி, வரும் 19ம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி பிளாண்ட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்களை பார்வையிடுகின்றனர். இறுதியாக 20ம் தேதி தனுஷ்கோடி செல்லும் குழுவினர், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். அதனை தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை நிதி கமிஷன் குழுவினர் நேரில் பார்வையிட உள்ளனர்.
எப்போது அமலுக்கு வரும்?
இதனிடையே மாநிலத்தின் நிதி தேவைகள், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிவாரணம் மற்றும் வரிப்பகிர்வு போன்றவற்றை எடுத்துரைத்து, நிதி பெறுவது போன்ற பணிகளை மேற்பார்வையிட வணிக வருவாய்த்துறை செயலர் பிரஜேந்திர நவ்னீத் என்பவரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார். 16வது நிதிக்குழு தனது பரிந்துரைகளை அக்டோபர் 31, 2025க்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2026 முதல் ஐந்தாண்டு விருது காலத்தை உள்ளடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1, 2026 முதல் 16வது கமிஷன் பரிந்துரைகளின்படி தமிழகம் தனது நிதி ஒதுக்கீடுகளைப் பெறத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.