12 Hours Labour Law: 12 மணி நேர வேலை சட்ட மசோதா; நாளை மறுநாள் தொழிற்சங்கத்துடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன், தமிழக அரசு சார்பில் நாளை மறுநாள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் தமிழக அரசு சார்பில் நாளை மறுநாள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி ஆலோசனை:
சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை சட்ட முன்வடிவு குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதுதொடர்பான அறிக்கையில் “கடந்த வெள்ளிக்கிழமை (21-4-2023) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)" தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டில் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், தொழில் துறை அமைச்சரும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள நடத்தப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் உடன் ஆலோசனை:
அதன்படி, பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா தொடர்பாக, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சி.வி. கணேசன் உள்ளிட்டோர், தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளனர்.
புதிய சட்டம் சொல்வது என்ன?
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதாவின்படி, 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. 12 மணி நேரம் வேலை செய்யலாமா? என்பதை தொழிலாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். தொழிலாளர்களின் ஒப்புதல் இருக்கிறதா? என்பதை பரிசீலனை செய்த பிறகே நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்கள் விடுமுறை?
தினமும் 12 மணி நேரம் வேலை என வரும் போது, வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் அதுவும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை. அதுவும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தாது. மின்னணு நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வரும்.