திருப்பத்தூர் பேருந்து விபத்தில் 11 பேர் பலி! விபத்துகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்
திருப்பத்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

சிவகங்கை : திருப்பத்தூர் பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது,சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இன்று மாலை நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 35 பேர் காயமடைந்துள்ளனர், இப்படியாக துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்ததாக, ஆரம்ப கட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிகிச்சை பெறும் போது, மேலும் ஏழு பேர் உயிரிழந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 11 பேரில் நான்கு பெண்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் நான்கு பேரின் சடலங்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், மூன்று பேரின் சடலங்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளிட்டுள்ள அறிக்கையில்.,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடிய விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலமாக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன் தென்காசி அருகில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தனர். இப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய இரு பேருந்துகளில் ஒரு பேருந்தின் ஓட்டுனர் தூங்கியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து பணி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட சோர்வு தான் விபத்துக்கு காரணமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
சாலைகளை சரி செய்வது, பேருந்துகளை சீரமைப்பது, போக்குவரத்து விதிகளை தீவிரமாக பின்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்த்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






















