100 Days of CM Stalin: மொத்தமும் சொன்ன புத்தகம்... இது முதல்வர் ஸ்டாலினின் பரிசு!
100 Days of CM Stalin: கடந்த 2017 முதல் தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடை மற்றும் பூங்கொத்துகளை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற வழக்கத்தை கொண்டவர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. அவர் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், அதாவது மே 14-ம் தேதி அன்று, தன்னை சந்திக்க வருபவர்களுக்கு பூங்கொத்து வேண்டாம் புத்தகம் போதும் என அறிக்கை விடுத்தார்.
ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடை மற்றும் பூங்கொத்துகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வழக்கத்தையே முதலமைச்சராக தான் பொறுப்பேற்ற பின்பும், தன்னை சந்திக்க வருபவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளொன்றுக்கு 50 முதல் 70 புத்தகங்கள் முதலமைச்சருக்கு பரிசாக வந்து குவிகின்றது. இதனால், 2017-ம் ஆண்டு முதல் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட 80,000-க்கும் அதிகமான புத்தகங்களை சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கி உள்ளார் முதலமைச்சர்.
அதுமட்டுமின்றி, தான் சந்தித்து வரும் முக்கிய நபர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நூறு நாட்களில், முக்கிய தலைவர்களுக்கு அவர் பரிசளித்துள்ள புத்தகங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. அந்த புத்தகங்கள் பற்றிய சின்ன ரீவைண்டு இதோ!
முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முறை டெல்லி சென்ற மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்ததோடு அஜயன்பாலா எழுதிய ‘செம்மொழி சிற்பிகள்’ என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். ஏற்கனவே, 2018-ம் ஆண்டு சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கும் இதே புத்தகத்தைதான் அவருக்கு பரிசளித்திருந்தார் மு.க ஸ்டாலின்.
இந்த புத்தகத்தில் அப்படி என்ன சிறப்பு? 2010-ம் ஆண்டு உலக செம்மொழி மாநாட்டின்போது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்நூலை முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் முன்னெடுப்பால் உருவாக்கப்பட்டது.
பிரதமரைத் தொடர்ந்து சோனியா காந்தியை சந்தித்த முதலமைச்சர், ’Journey of a Civilization: Indus to Vaigai’ புத்தகத்தை வழங்கினார்.
2019-ம் ஆண்டு வெளியான இந்த புத்தக்கத்தில், சிந்து சமவெளி நாகரிகம் மறைய தொடங்கிய போது அந்த மக்கள் எங்கு சென்றனர்? சங்க இலக்கியம் தொடங்கிய காலம் எப்போது? அதை யார் எழுதியது? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தமிழ் மொழியின் வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும் என்பதை இந்தப் புத்தகம் கூறுகிறது. எனவே தமிழ் மொழி ஆய்வு தொடர்பான சிறப்பான புத்தகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
அடுத்ததாக, குடியரசுத்தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையை குறித்து மனோகர் தேவதாஸ் எழுதியும் வரைந்தும் வெளியிட்ட ’Multiple Facets Of My Madurai’ நூலை பரிசாக கொடுத்தது பலரின் கவனத்தை பெற்றது.
மதுரையில் தனது வாழ்கையில் நடந்த அனுபவங்களையும், தான் வரைந்த ஓவியங்களையும் இணைத்து மனோகர் தேவதாஸ் எழுதிய நூல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. The Green Well years, Multiple Facets of My Madurai, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் போன்ற அவரது நூல்கள் பிரபலமானவை.