Corona Cases : தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் : ஒரே உத்தரவில் இத்தனை லட்சம் வழக்குகள் வாபஸ்?
தமிழகத்தில் கொரோனா காலத்தில் தொடரப்பட்ட ஊரடங்கு விதிமீறல்கள் தொடர்பான 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே உத்தரவு; 10 லட்சம் வழக்குகள் வாபஸ்
தமிழகத்தில் கொரோனா காலத்தில் தொடரப்பட்ட ஊரடங்கு விதிமீறல்கள் தொடர்பான 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு விதிமீறல்:
தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டதற்குப் பிறகு ஊரடங்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும் விதிகளையும் அமல்படுத்தி இருந்தன. ஆனால், ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோதே, லட்சக்கணக்கானோர் விதிமீறல்களில் ஈடுபட்டனர்.பலர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக விதிகளை மீறினா். பலர் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்ப்பதற்காக சாலைகளில் வந்தும் வாகனம் ஓட்டியும் விதிகளை மீறினர். இது போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வந்தனர்.
2 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேல் வழக்கு:
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற தீவிர கொரோனா கால வழக்குகள் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும். இந்தச் சூழலில், கடந்த சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பே, அப்போதைய முதலமைச்சர் தென்காசி கூட்டமொன்றில் பேசும்போது, கொரோனா கால வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து இருந்தார். ஆனால், நடைமுறைக்கு அது வந்ததாகத் தெரியவில்லை.
வழக்குகள் வாபஸ்- டிஜிபி
அதன் பின் தேர்தல் நடைபெற்று, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இந்தச் சூழலில், கொரோனா கால வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் அடிப்படையில், தற்போது தமிழக காவல்துறை தலைவரான டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், ஊரடங்கு அமலில் இருந்த கொரோனா காலகட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டவர்கள் ஆகியோர் மீது போடப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகளையும் அந்தந்த மாவட்ட போலீசார் வாபஸ் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
வாபஸ் பெறப்பாடாத வழக்குகள்:
ஆனால், அந்தச் சமயத்தில், முறைகேடாக “இ பாஸ்” பெற்றவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள், போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படாது என திட்டவட்டமாக அந்த சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:
எது எப்படி இருப்பினும், ஓர் உத்தரவில் 10 லட்சம் வழக்குகள் வாபஸ் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதலாம். தமிழகத்தில் ஏற்கனவே, ஒரே கையெழுத்தில் பல லட்சம் அரசு ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்