Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் குளிக்க தடை! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,033 கனஅடியில் இருந்து 29,540 கனஅடியாக அதிகரித்துள்ளது.

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,033 கனஅடியில் இருந்து 29,540 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் கீழ் பகுதிகளான பெங்களூரு மாண்டியா ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்றிரவு முதலே அதிகரிக்க தொடங்கியது. அணைகளில் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணையில் உபரி நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 29,540 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், இன்று காலை விநாடிக்கு 59,123 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களாக நீர் வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் காலை 111.48 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.18 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றம்
கடந்த 2 நாள்களில் அணையின் நீர்மட்டம் 3.70 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 85.99 டிஎம்சியாக உள்ளது. இதனிடையே, அணையின் 16 கண் மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மைய அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 100 நாட்களுக்கு மேலாக வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மாலை 6 மணிக்கு 57 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
அதேபோல, பிரதான அருவி, தொங்கு பாலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கியது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் ஆற்றிலும், அருவிகளிலும் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது. கர்நாடகா வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தருமபுரி மாவட்ட காவிரியின் கரையோர பகுதிகளை வனம், வருவாய் உள்ளிட்ட அரசுத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.





















