Velmurugan Slams CM Stalin: சமூக நீதி என்று மேடைக்கு மேடை பேசும் முதல்வர் இதை செய்ய வேண்டும் - வேல்முருகன்
ஆளும் கட்சியிடம் 10 கோரிக்கைகள் முன்வைத்தால், மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஏழு கோரிக்கைகள் நிலுவையில் வைக்கப்படுகிறது. அதற்கும் போராட்டங்கள் வாயிலாகவும், அரசிடமும் வலியுறுத்தி வருவதாக கூறினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பிறகட்சிகளில் இருந்து ஆட்கள் பிடிப்பதில்லை. பிற கட்சிகளை பிளவுபடுத்த எண்ணம் இல்லை. அவர்கள் பல்வேறு விதமான காரணங்களால் விலகி பல்வேறு மாதங்கள் காத்திருந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் இணைத்துக் கொள்ளலாம் ஆழ்ந்து ஆராய்ந்து பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். என்னை தொடர்புகொண்டு சந்தித்து என்னுடன் சேர்த்து பயணிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
குறிப்பாக கட்சியில் இணைவதற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. அவர்களே செலவு செய்து கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். தேர்தல் காலத்தில் வெற்றியை இலக்காக வைத்து திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரங்களை கைப்பற்ற முடியும் என்ற அடிப்படையில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கின்றோம் என்று கூறினார்.
தனித்து நிற்கும், தனி தமிழ் தேசியம் படைப்போம் என்பது இப்போது இருக்கும் தமிழகத்தில் சாத்தியமற்றதாக இருக்கிறது. விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரனே ஏற்றுக் கொண்ட பெரியாரை, எதிர்ப்பாக நிறுத்தி அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். மேலும் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் நமது கோரிக்கைகளை முன் வைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழியில் செயல்பட்டு வருகிறோம். ஆளும் கட்சியிடம் 10 கோரிக்கைகள் முன்வைத்தால், மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஏழு கோரிக்கைகள் நிலுவையில் வைக்கப்படுகிறது. அதற்கும் போராட்டங்கள் வாயிலாகவும், அரசிடமும் வலியுறுத்தி வருவதாக கூறினார். இட ஒதுக்கீட்டிற்கு ஒரே தீர்வு ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும்தான். சமூக நீதி என்று மேடைக்கு மேடை பேசும் முதல்வர் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் அனைத்து மக்களுக்கும் சமநீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
டங்ஸ்டன் பிரச்சனைக்கு முதன் முதலில் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தது நான் தான். அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து நன்றி கூறி வருகின்றனர். ஆனால் என்னை தற்போது வரை யாரும் வந்து பார்க்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
டங்ஸ்டன் பிரச்சினைக்கு மட்டும் மத்திய அரசு அமைச்சர்களை, அண்ணாமலை அழைத்து வருகிறார். என்எல்சி, பரந்தூர் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடத்தும் இடத்தை அண்ணாமலை எட்டிகூட பார்க்கவில்லை. தேசியம் பேசும் அண்ணாமலை அரசியல் பேசுவதற்கு மட்டுமே, ஒரு சில இடத்திற்கு செல்வதும்; அந்த கருத்துக்களை மட்டுமே மத்திய அரசிடம் எடுத்து கூறுகிறார். அண்ணாமலை இடம் ஏன் இவ்வாறு பாரபட்சம் பார்க்கிறார்கள் என்று கேள்விக்கு பதிலை பெற்று தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
ஈழப் போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த, பிரபாகரன் பற்றி வேறு வேறு தலைப்புகளில் பேசப்படுகிறது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
திமுக கட்சி கொடியுடன் இரண்டு கார்கள் பெண்களை துரத்திய விவகாரத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழக காவல்துறைக்கும், முதல்வருக்கும் வேண்டுகோள் இதில் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். காரில் இருந்த பெண்கள் பயத்தில் பேசிய காட்சியை, அந்த பெண் குழந்தைகளின் தாயார்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
10.5 சதவீதம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தடைக்கு வந்ததால் தமிழக அரசு செயல்படுத்தாமல் வைத்து விட்டார்கள். வன்னியர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கினால், பிற சாதியினர் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்று தமிழக முதல்வர் எண்ணினால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் யோசிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார். திமுக, வன்னியர் உட்பட பிற சாதிகளுக்கு சமூக நீதி வழங்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார்.
சீமான் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர். நானும் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டேன். நாகரிகம் கருதி அவர் குறித்து கருத்துக்கள் கூறாமல் தவிர்த்து செல்கிறேன். பிரபாகரனை மூச்சுக்கு 300 முறை தலைவர் என்று சீமான் கூறுவதால் அவரை விமர்சிக்காமல் கடந்து செல்கிறேன் என்றும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

