என் அப்பா நினைவாக இது மட்டும்தான் இருக்கு; தங்கையா நெனச்சி விட்டு கொடுங்க...! - வாகன ஏலத்தில் கண்ணீருடன் நின்ற பெண்ணின் நெகிழ்ச்சி சம்பவம்
தனது தந்தை 2020 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது நினைவாக உள்ளது இந்த வண்டி மட்டும் தான், என்னை உங்களது தங்கையாக நினைத்து விட்டுக் கொடுங்கள் என சுமதி கண்ணீருடன் மன்றாடினார்
சேலத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை சார்பில் சேலம் மாநகர காவல்துறை மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை என இரண்டாகப் பிரித்து ஏலம் விடப்பட்டது. சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த ஆண்டு மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் யாரும் உரிமை கோராத வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படுவது வழக்கம். அதனடிப்படையில் சேலம் மாவட்டம் குமாரசாமி ஆயுதப்படை மைதானத்தில் வாகன மேலும் இன்று காலை முதல் நடைபெறுகிறது. சேலம் மாநகர காவல் துறை சார்பில் 93 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் 11 கார்களும் என மொத்தம் 106 வாகனங்களும், சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 120 இருசக்கர வாகனங்கள் ஒரு ஆட்டோ ஆறு கார்கள் என மொத்தம் 233 வாகனங்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஏற்கனவே காவல்துறை அறிவித்தபடி 5,000 ரூபாய் முன் பணம் செலுத்திய பொது மக்கள், வாகனத்தின் உரிமையாளர்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் ஏராளமானோர் ஆர்வத்துடன் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மாடசாமி மற்றும் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் தனித்தனியே ஏலம் நடைபெற்றது.
இதனிடையே, சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்த சுமதி என்ற பெண் அவரது தந்தையின் வாகனத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு உறவினர் எடுத்துச் சென்றபோது விபத்து நடந்துள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே அவர்களுக்குள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வாகனம் ஏலத்திற்கு வந்த சுமதி அங்கிருந்தவர்களிடம் தனது தந்தை 2020 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது நினைவாக உள்ளது இந்த வண்டி மட்டும் தான், என்னை உங்களது தங்கையாக நினைத்து விட்டுக் கொடுங்கள் என கண்ணீருடன் மன்றாடினார். சுமதியின் வேண்டுகோளை ஏற்று அங்கிருந்தவர்கள் அந்த வண்டியை மட்டும் விட்டுக் கொடுத்தனர். அதன்பின் ஆனந்தக் கண்ணீருடன் தனது தம்பிக்கு இந்த வண்டியை பரிசளிப்பதாக அவர் கூறினார். எனது கண்ணீருக்கு பதிலளித்து விட்டுக் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதனால் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 1000 ரூபாய் மட்டுமே செலுத்தி சுமதி வாகனத்தை எடுத்துச் சென்றோம்.