Watch video: KTM வண்டியையே உருவாக்கிய மெக்கானிக்.. மகன் ஆசைப்பட்டதால் இப்படியொரு பரிசுகொடுத்த அப்பா!
ஒரு ஆண்டு உழைப்பில் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மகனுக்கு இந்த வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுக்கா தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி செல்வ பிரியா. தங்கராஜ் அதே பகுதியில் 20 ஆண்டுகளாக இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் மோகித், ஒரு நாள் தந்தை தங்கராஜ் உடன் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது. அந்த வழியாக வந்த கேடிஎம் ஆர்சி 200 இருசக்கர வாகனத்தை பார்த்து அதன் மீது ஆசை கொண்டுள்ளார். சிறுவன் மோகித் தினந்தோறும் தனது தந்தையிடம் தனக்கு கேடிஎம் பைக் வேண்டும் என அடம் பிடித்துள்ளார்.
இதனை நிறைவேற்றும் வகையில் தங்கராஜ் தான் பணியாற்றும் இடத்திலேயே அவ்வப்போது தனது மகன் மோகித் ஆசைப்பட்ட கேடிஎம் ஆர்சி 200 இருசக்கர வாகனத்தை தயார் செய்ய முடிவு செய்தார். அதனையடுத்து விற்பனைக்கு வந்த ஒரு ஸ்கூட்டியை விலைக்கு வாங்கியுள்ளார் தங்கராஜ். அதன்பின் வாகனத்தின் இன்ஜினை எடுத்து அதனை கேடிஎம் ஆர்சி 200 பைக் ஆக மாற்றி சிறுவனுக்கு ஏற்றார்போல் ஒரு புதிய பைக்கை தயார் செய்வதற்கு ஓராண்டு காலம் அவகாசம் எடுத்துக் கொண்டார். பின்னர் கேடிஎம் ஆர்சி 200 போன்ற வடிவமைப்பை கொண்ட இருசக்கர வாகனத்தை வடிவமைத்து அந்த பைக்கை தன் மகனுக்கு பரிசாக வழங்கியுள்ளார் தங்கராஜ்.
மகன் ஆசையை நிறைவேற்ற கேடிஎம் வாகனத்தை உருவாக்கி பரிசளித்த மெக்கானிக் தந்தை.@KTM_Racing #Salem #KTM #abplive #bike #abpnadu pic.twitter.com/dyIS4ATQ3c
— Kelikaimanidhan (@Sathishsv1906) June 1, 2022
இதுகுறித்து தங்கராஜ் கூறுகையில், "ஒரு ஆண்டிற்கு முன்னர் சாலையில் சென்றபோது கேடிஎம் இருசக்கர வாகனத்தை பார்த்த மோகித் அந்த வண்டியை தனக்கு வாங்கிக் கொடுக்குமாறு கொண்டார். அதன்பின் அவருக்கு கேடிஎம் மீது மிகுந்த ஆர்வம் வந்தது தினம்தோறும் அடம் பிடிக்கத் தொடங்கினார். எனவே இருசக்கர வாகன மெக்கானிகான நான் ஒரு ஆண்டு உழைப்பில் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மகனுக்கு இந்த வாகனத்தை பரிசாக அளித்து உள்ளேன் என்றார். மேலும் இந்த வாகனத்தை மோகித் வீட்டின் காம்பவுண்ட் உள்ளே ஓட்டுவதற்கு மட்டுமே அனுமதித்து உள்ளோம்" என்று கூறினார்.
தன் ஆசைப்பட்ட இருசக்கர வாகனம் கிடைத்த மகிழ்ச்சியில் அதே வாகனத்தில் தன் தந்தையை அமரவைத்து தீவட்டிப்பட்டி சாலையில் மகிழ்ச்சியாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மகனுக்கு சிறிய வகை இருசக்கர வாகனத்தை உருவாக்கி கொடுத்த தந்தையினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் கூட சிறுவர்களுக்கு வாகனம் ஓட்டி கற்றுத் தருவது சட்டப்படி குற்றமாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.