அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவியை தனியாருக்கு தாரை பார்க்க த.வெ.க அரசு முயற்சிப்பதாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அச்சம்

”அரசு கேபிள் டிவியை தனியாருக்கு தாரை பார்க்க த.வெ.க அரசு முயல்கிறதோ என்ற அச்சம் உள்ளது” என்று தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் தாமோதரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் தலைவர் தாமோதரன் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் 5 லட்சம் அரசு கேபிள் இணைப்பு உள்ளது. இதில் 1400 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளார்கள். இந்த தொழிலை நம்பி 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசு கேபிள் டிவி சிக்னல் சர்வர் பிரச்சினை காரணமாக சரியாக சிக்னல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்கள் பணத்தை கட்ட முடியாமலும் கட்டாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்க முடியாத நிலையும் உள்ளது. கடந்த ஆண்டு இதேபோல சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. ஆப்ரேட்டர்கள் சங்கம் போராட்டத்திற்கு பிறகு அது சரி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டை போல தற்போதும் சர்வர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் நிறுவனம் தனியார் சர்வர் நிறுவனத்திற்கு சரிவர பணம் செலுத்தாததால் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சர்வப் பிரச்சினையினால் கடந்த சில ஆண்டாக 5 லட்சமாக இருந்த இணைப்பு 2 லட்சமாக குறைந்துள்ளது. இதுபோன்ற செயல்களை பார்க்கும்போது கேபிள் தொழிலை அரசு தனியாருக்கு தாரை வார்க்க அரசு முற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















