ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
பிரீமியம் ஹேட்ச்பேக் காரான மாருதி பலேனோ 18,241 யூனிட்டுகள் விற்பனையுடன் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த ஆண்டு இது 12,503 ஆக இருந்தது.

இந்திய கார் சந்தையில் ஜூலை 2026-ல் ஹேட்ச்பேக் கார்களுக்கான தேவை வலுவாக இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்த செக்மென்டின் மாதாந்திர விற்பனை 1 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியுள்ளது. ஜூலை 2025-ல் 74,475 கார்கள் விற்பனையான நிலையில், ஜூலை 2026-ல் மொத்தம் 1,07,602 ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையாகியுள்ளன.
ஒரே ஆண்டில் விற்பனை 33,127 யூனிட்டுகள் அதிகரித்து, 44.48% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாருதி சுசுகியின் வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
மாருதி வேகன்ஆர் முதலிடம்
ஸ்விஃப்ட், பலேனோவை வீழ்த்தி, ரூ.4.99 லட்சம் விலை கொண்ட மாருதி வேகன்ஆர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜூலை 2025-ல் 14,710 ஆக இருந்த இதன் விற்பனை, இந்த ஜூலையில் 23,338 ஆக உயர்ந்துள்ளது. இது 8,628 யூனிட்டுகள் (58.65%) வளர்ச்சியாகும். மொத்த ஹேட்ச்பேக் விற்பனையில் இதன் பங்கு 21.69%.
என்னதான் காரணம்?
குறைந்த விலை, சிறந்த மைலேஜ் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவை இதன் வெற்றிக்குக் காரணம். அடுத்ததாக, ஸ்போர்ட்டியான வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்விஃப்ட் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு 14,190 ஆக இருந்த இதன் விற்பனை, தற்போது 21,538 ஆக உயர்ந்துள்ளது. இதன் விற்பனை அதிகரிப்பு 7,348 யூனிட்டுகள் (51.78% வளர்ச்சி). சந்தைப் பங்கு தோராயமாக 20%.
பிரீமியம் ஹேட்ச்பேக் காரான மாருதி பலேனோ 18,241 யூனிட்டுகள் விற்பனையுடன் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த ஆண்டு இது 12,503 ஆக இருந்தது. இது 5,738 யூனிட்டுகள் அல்லது 45.89% உயர்வாகும். சந்தைப் பங்கு 16.95%. மாருதி ஆல்டோ விற்பனை ஜூலை 2025-ல் 5,910 ஆக இருந்த நிலையில், தற்போது 12,534 ஆக இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் 6,624 யூனிட்டுகள் அதிகரித்து 112.08% அதிரடி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இருப்பு தக்கவைப்பு
இவை தவிர, டாடா டியாகோ மற்றும் டியாகோ இ.வி. (7,429 யூனிட்டுகள்), ஹூண்டாய் ஐ20 (6,738 யூனிட்டுகள்) விற்பனையாகி நல்ல நிலையில் உள்ளன. டொயோட்டா கிளான்சா (4,461), ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (4,055) மற்றும் மாருதி செலிரியோ (3,914) ஆகிய மாடல்களின் விற்பனை சற்று சரிந்தாலும், சந்தையில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துள்ளன.
எஸ்யூவிகளின் மோகம் அதிகரித்தாலும், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு எளிதான சிறிய ரேஞ்ச் கார்கள், சிறந்த மைலேஜ், குறைந்த கொள்முதல் மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் மீண்டும் ஹேட்ச்பேக் கார்களை நாடுகின்றனர்.
வலுவான கம்பேக்
வேகன்ஆர் முதலிடம், ஸ்விஃப்ட், பலேனோ அடுத்தடுத்த இடங்கள் மற்றும் ஆல்டோவின் 112% வளர்ச்சி மூலம், சுமார் 44.5% ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சியுடன் ஹேட்ச்பேக் செக்மென்ட் இந்திய சந்தையில் மீண்டும் வலுவான கம்பேக் கொடுத்துள்ளதை ஜூலை 2026 தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்






















