NEET Student Suicide: நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தற்கொலை... காரணத்தை துப்பறியும் காவல்துறை!
ஆத்தூர் அருகே நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரிச் அகாடமி என்ற தனியார் நீட் தேர்வுக்கு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகின்றார். நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய் நத்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சந்துரு விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென வகுப்பு நேரத்தில் கழிவறைக்கு செல்வது போல் விடுதிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விடுதிக்கு வந்த சக மாணவர்கள் சந்துருவின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து விடுதி வார்டன் பிரவீன் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வார்டன் பிரவீன் குமார் உடனடியாக சந்துரு அறைக்கு வந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் சந்துரு இருந்துள்ளார். இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆத்தூர் காவல்துறையினர் பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் உள்ளிட்டவரிடம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியல் துறை அதிகாரிகளும் தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ”ஆத்தூர் அருகே தனியார் நீட் கோச்சிங் சென்டரில் மாணவர் சந்துரு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். ஏற்கனவே அவர் நீட் தேர்வு எழுதிய நிலையில் மீண்டும் பயிற்சிக்காக இங்கு வந்துள்ளார். திடீரென பிற்பகலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் பெற்றோரிடம் புகார் பெறப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வு முறையாக நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளோம். மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தற்கொலை எண்ணங்களை விட்டோழிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)