சாலையில் விழுந்த ராட்சத பாறை - சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு
கடந்த மாதம் 12 ஆம் தேதி இதேபோன்று இரண்டாம் கொண்டை ஊசி வளைவின் அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்லும் தடை விதிக்கப்பட்டிருந்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. தொடர் மழை காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாம் கொண்டை ஊசி வளைவு அருகில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் ராட்சத பாறை ஒன்று சாலையில் உருண்டு விழுந்தது. வார இறுதி நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், அதிஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. ராட்சத பாறை சாலையில் விழுந்தால் ஏற்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு அடிவாரத்தில் நிறுத்தப்பட்டனர். தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வந்தது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 12 ஆம் தேதி இதேபோன்று இரண்டாம் கொண்டை ஊசி வளைவின் அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்லும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இதுபோன்று மண்சரிவு ஏற்படுவதால் ஏற்காட்டில் வாழும் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதே போன்று, சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடந்த 4 ஆம் தேதி இரவு ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் சேலம் - ஏற்காடு பிரதான சாலை வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆறு நாட்களுக்குப் பின்பு குப்பனூர் - ஏற்காடு வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ச்சியாக இதுபோன்ற மண்சரிவுகள் நிகழ்ந்து வருவதால் இரவு நேரங்களில் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு வாகனங்கள் ஏற்காடு அடிவாரத்தில் நிறுத்தப்படுகின்றன.