முதல்வரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் 70 பேருக்கு 70 ரூபாய்க்கு ஹெல்மெட் விற்பனை
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் ஜம் ஜம் ஹெல்மெட் கடை உரிமையாளர் முகமது காசிம் 70 நபர்களுக்கு 70 ரூபாய் மதிப்பில் ஐஎஸ்ஐ தரச் சான்று உடைய ஹெல்மெட்டை திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்தார்.
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. விபத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்துக் காவலர்கள் கூறி வருகின்றனர். இவர்களுக்கு துணையாக இருக்கும் வகையில் சேலத்தில் ஜம் ஜம் ஹெல்மெட் கடை உரிமையாளர் முகமது காசிம் இந்த முன்னேறிப்பினை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து திரைப்பட நடிகர் பெஞ்சமின் கூறுகையில், "தமிழக அரசு சாலை பாதுகாப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சாலை விபத்தில் தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதியுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இவர்களுக்கு துணையாக இருக்கும் வகையிலும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் தமிழக முதல்வர் பிறந்த நாளான இன்று 70 நபர்களுக்கு ரூபாய் 70 மதிப்புள்ள தரமான ஐ எஸ் சி முத்திரையுடைய ஹெல்மெட்டை வழங்கினேன்" என்று கூறினார்.
இதுகுறித்து ஜம் ஜம் ஹெல்மெட் கடையின் உரிமையாளர் முகமத் காசிம் கூறுகையில், "தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதலில் வரும் 70 பேருக்கு 70 ரூபாய்க்கு தலைக்கவசம் வழங்கினோம். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வர் பாடுபட்டு வருகிறார். அதற்கான ஒரு சிறிய முயற்சியாக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஹெல்மெட் விற்பனை செய்து வருகிறோம். இதனை ஒரு சேவையாக செய்து வருகிறேன். வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றார். மேலும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதால் பல்வேறு சலுகைகளை தந்து வருகிறோம். குறிப்பாக, தக்காளி கிலோ 100-க்கு விற்பனையான போது ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ இலவசம். இதேபோன்று வெங்காயம் கிலோ 200க்கு விற்பனையான போது ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்றும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ஆக உயர்ந்த போது ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினோம்" என்று கூறினார்.