முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சேலம் மாநகராட்சி சார்பில் சிலை; மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சேலம் மாநகர் அண்ணா பூங்காவில் சிலை அமைக்கும் தீர்மானம் மாமன்றத்தில் மேயர் ராமச்சந்திரன் வாசித்தார்.
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சேலம் மாநகராட்சியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் அறிக்கை தயார். கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாமன்ற உறுப்பினர் கலையமுதன் தலைமையில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் குடிநீர் பிரச்சனைக்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து தயாரித்த அறிக்கையை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் வழங்கினர். அதன்பின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சேலம் மாநகர் அண்ணா பூங்காவில் சிலை அமைக்கும் தீர்மானம் மாமன்றத்தில் மேயர் ராமச்சந்திரன் வாசித்தார்.
அப்போது சேலம் மாவட்டத்திற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி எண்ணற்ற பல திட்டங்களை சேலம் மக்களுக்கு கொடுத்துள்ளார். குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகம் அமைத்தது, அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகள் சேலத்திற்கு கருணாநிதி கொண்டு வந்த திட்டமாகும். அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதி நீண்ட நாள் தனது இளமை பருவத்தில் சினிமா துறையில் வேலை பார்த்தபோது சேலம் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். எனவே அவருக்கு சேலம் மாநகராட்சியில் சார்பில் கருணாநிதி நினைவாக சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தீர்மானத்தை வாசித்தார். அதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்காமல் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா பூங்காவில் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் உள்ள நிலையில் தற்போது அதே இடத்தில் கருணாநிதி சிலையும் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், அதிமுகவினர் புதிதாக அமைக்கப்படும் குடிநீர் திட்டத்தினை எதிர்த்து விவாதத்தை தொடங்கினர். ஏற்கனவே உள்ள திட்டத்தில் சேலம் மாநகராட்சி க்கு சரியான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிதாக குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி மாநகராட்சி பணத்தை செலவு செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். மேலும் சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதற்காக இந்த நிதியினை ஒதுக்கி சேலம் மாநகராட்சியை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு கருத்து தெரிவித்த திமுகவினர், அதிமுக மாமன்ற உறுப்பினர் அவரது வார்டு பிரச்சனையை மட்டும் பேசினால் போதுமானது. சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளையும் பற்றி பேச வேண்டாம் என கூறினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன், மாமன்ற கூட்டம் தொடங்கியவுடன் திமுக மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பேசி வருகின்றனர். பிற கட்சியைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் திமுக மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்தனர். மேலும் சேலம் மாநகர பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுகளை கண்டறிவது, சேலம் மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நோய்களை பிடிப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்த விவாதிக்கப்பட்டது.