(Source: ECI/ABP News/ABP Majha)
8ஆம் வகுப்பு...! 9 புத்தகங்கள்...! 36 விருதுகள் - முனைவர் பட்டம் பெற்று அசத்தும் சேலம் அரசுப்பள்ளி மாணவன்
’’தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கு கவிதை, பாரதியாரின் ஆத்திச்சூடி, ஔவையார் ஆத்திச்சூடி, காலத்தை வென்ற கலாம் ஆகிய தொகுப்பு கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார்’’
சேலத்தில் அரசுப்பள்ளி மாணவன் கவிதை மீது கொண்ட காதலால் 9 புத்தகங்களை எழுதி வெளியிட்ட நிலையில் 36 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் வசிக்கும் செல்வகுமார்-விஜயலட்சுமி, தம்பதியின் மகன் மதுரம் ராஜ்குமார். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், இந்த சிறுவன் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் போது தந்தையிடம் கவிதை எழுதித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது நீயாக முயற்சித்துப் பார் என்று கூறியவுடனே, கவிதை என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தந்தையிடம் கேட்டறிந்தார்.
அப்பொழுது சிறுவனுக்கு கவிதை மீதான ஆர்வம் தீயாகப் பற்றிக் கொண்டது. முதலில் தந்தை, தாய் பற்றிய கவிதை எழுதி இரண்டாம் பரிசு வென்றபோது ஏற்பட்ட ஊக்கத்தினால் கவிதையின் மீது தீராத காதல் கொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். தற்பொழுது 12 வயதாகும் மாணவன் மதுரம் ராஜ்குமார் 9 புத்தகங்களை எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் சார்பாக முனைவர் பட்டம், இளம் கம்பர், இளம்பாரதி மற்றும் பல்வேறு துறைசார்ந்த விருதுகள் என 36 விருதுகளை பெற்று, அனைத்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களாலும், அனைத்து சாதனைகளையும் புரிய முடியும் என்று மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
குறிப்பாக தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கு கவிதை, பாரதியாரின் ஆத்திச்சூடி, ஔவையார் ஆத்திச்சூடி, காலத்தை வென்ற கலாம் ஆகிய தொகுப்பு கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார். குறிப்பாக வாழ்க்கையில் நிகழும் தினசரி அன்றாட நிகழ்வுகளை கொண்டு சிறுகதைகளையும் கற்பனை கலந்து சிறுவன் எழுதி அசத்தியுள்ளார். நான் நன்றாகப் படித்து வருங்காலத்தில் மருத்துவம் படித்து முடித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் மருத்துவம் படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனால் தான் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக புரிந்து கொள்ளமுடியும் என்பதே என்னுடைய கண்ணோட்டம் என்றும் மாணவன் கூறுகிறார்.
மேலும், தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் முடிந்தவரை தமிழில் பேசுவதையும், எழுதுவது மற்றும் கையப்பம் இடுவது போன்றவற்றை செய்துவந்தால் தமிழ் தானாக வளரும் என்று மாணவன் கூறினார். இதனை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அரசுப்பள்ளி மாணவன் மதுரம் ராஜ் குமாரை அழைத்து பாராட்டு தெரிவித்தார். மதுரம் ராஜ்குமாரின் தந்தை செல்வகுமார் கூறுகையில், அனைத்து குழந்தைகளுக்கும் தனித்திறமை என்று ஒன்று இருக்கும் அதனை வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை இன்று கூறினார்.