Salem School Holiday: கனமழைக்கு வாய்ப்பு... சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை 16.10.2024 புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
சேலம்: தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை 16.10.2024 புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் 15, 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடர்மழை:
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர் அஸ்தம்பட்டி, கோரிமேடு, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, நான்கு ரோடு, ஐந்து ரோடு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாளை சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை:
இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை 16.10.2024 புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.