(Source: ECI/ABP News/ABP Majha)
சேலம்: பொது மக்களின் மனுக்களை வாங்கிய ஆட்சியர்-தீக்குளிப்பு முயற்சிகள் இல்லாமல் முடிந்த குறைதீர் கூட்டம்
’’மாவட்ட ஆட்சியரே நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை வாங்கியதால் தீக்குளிப்பு உள்ளிட்ட எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் குறைதீர் கூட்டம் நடந்து முடிந்தது’’
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசு உத்தரவுப்படி மீண்டும் தொடங்கியது. சேலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொது மக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மனுக்களை பெற்று கொண்டார்.
பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை புகார் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்து அதன் மூலம் உடனடி தீர்வு காண ஏதுவாக வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டங்களில் மூலம் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக மனுக்கள் பெறுவது தவிர்க்கப்பட்டு புகார் பெட்டி வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன. இதனால் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு காணப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்தது. இந்தநிலையில் நோய்த்தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருவதால் மீண்டும் நேரடி குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த தமிழக அரசு சார்பில் கடந்த 28 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் தொடங்கப்பட்டன. சேலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டு அதை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னதாக ஏற்கனவே புகார் பெட்டி வாயிலாக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன நடவடிக்கை எடுக்கப்படாத எத்தனை அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அனைத்து துறை அலுவலர்களிடம் நேரடி ஆய்வு மேற்கொண்டார். நேரடி குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டது எடுத்து மனுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மனுக்களை ஆட்சியரிடம் அளிக்க வரும்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் போடும் நிலை இருந்ததால், பலர் தற்கொலை முயற்சியும், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாததால் பலர் தீக்குளிக்க முயன்றனர் எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிய தீயணைப்பு வாகனம் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நிறுத்திவைக்க பட்டிருந்த நிலையில் இன்று நேரடியாக ஆட்சியரிடம் மனு அளித்ததால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.