Tomato price: சேலம் மாநகரில் 15 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்
சேலம் மாநகர பகுதியில் உள்ள என்ஜிஜிஓ கூட்டுறவு பண்டகசாலையில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பொதுமக்களுக்கு மலிவு விலை தக்காளியை விற்பனை செய்தனர்.
![Tomato price: சேலம் மாநகரில் 15 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம் Sale of tomatoes in 15 fair price shops in Salem city TNN Tomato price: சேலம் மாநகரில் 15 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/d9bf4b63ec185b2a29d1b9c43c0c87d51689077327968113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் முதற்கட்டமாக 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ. 140 வரை விற்பனை கடைகளில் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் விலையை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அத்தியாவசிய பொருட்களை யாரேனும் கடத்துகிறார்களா எனவும் கண்காணிக்க உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி சேலம் மாநகர பகுதியில் உள்ள என்ஜிஜிஓ கூட்டுறவு பண்டகசாலையில் மலிவு விலை தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இதனை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு மலிவு விலை தக்காளியை விற்பனை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் சேலம் மாநகர பகுதிகளில் உள்ள 15 நியாய விலை கடைகளிலும் மலிவு விலை தக்காளி ஆனது விற்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பொதுமக்கள் மலிவு விலை தக்காளியை தில்லை நகர், மாவட்ட ஆட்சியர் வளாகம், டாக்டர்.சுப்பராயன் சாலை, சுப்பரமணிய நகர், பிடாரி அம்மன் கோவில் வீதி, புது திருச்சி கிளை சாலை, தாதம்பட்டி, திருவாக்கவுண்டனூர், சீரங்கப்பாளையம், தேவாங்கப்புரம், சாமிநாதபுரம், ஜவகர் மில் காலனி, ஸ்வரணபுரி மற்றும் மெய்யனூர் பகுதிகளில் உள்ள விலை கடைகளில் மளிகை விலை தக்காளியை வாங்கிக் கொள்ளலாம். சேலம் மாநகரத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு விற்பனைக்காக 1.5 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் நியாய விலை கடைகளில் மாதாந்திர பொருட்களை பெறுவது போல ரசீது பெற்றுக் கொண்டு 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நாளுக்கு நாள் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடைகளில் விற்கப்படும் தக்காளி ஆனது சேலத்தில் ரூ.80-130 வரை விற்கப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் தக்காளி ரூபாய் 60க்கு விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர். மேலும் தக்காளியை போன்று அனைத்து காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளதால் தமிழக அரசு நியாய விலை கடைகளில் வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட விலை அதிகரித்துள்ள பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)